மீண்டும் தலைதூக்கும் ஊழல், ரவுடீசம்: அரசியல்வாதிகளை சாடும் அனுர

‘அரகலய’வுக்குப் பின்னர் பின்வாங்கிய ஊழல் மற்றும் ரவுடித்தனமான அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரகலயவின் உண்மையான அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமானால், மக்கள் எழுச்சியின் உண்மையான நோக்கத்தை பேணுகின்ற அரசாங்கமொன்று நிறுவப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இங்கு உரையாற்றிய அவர்;

”2022 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சியின் உண்மையான அபிலாஷைகளை நிலைநிறுத்தக்கூடிய ஒரே அரசியல் சக்தி மற்றும் அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி மாத்திரமே.

அரசியல்வாதிகள் அரகலயவில் இருந்து பாடம் கற்கவில்லை. மாறாக போதைக்கு அடிமையானவர்களின் எழுச்சி எனக்கூறி மக்களின் எழுச்சியை அவமானப்படுத்துகின்றனர்.

மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு அரசியல் சக்தி மீதும் விசுவாசம் இன்றி பொதுவான அபிலாஷைகளுடன் வீதிக்கு இறங்கினர். இதனை ஆட்சியாளர்கள் உணரவில்லை.

மோசடி மற்றும் ஊழல் அற்ற ஒழுக்கமான, நீதியான நாட்டை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், அரசியல்வாதிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களை அடக்கியாள ஆரம்பித்துள்ளனர்.

அரச சொத்துகளை விற்க முனைவதுடன், அரகலயவின் பின்னரும் பழைய பாதையிலேயே பயணிக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin