ஈஸ்டர் தாக்குதல் : ஹேமசிறி – பூஜித மீதான விசாரணை மார்ச் 23-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கை மீள விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இதற்காக நீதிபதிகள் குழாம் (Bench) இன்னும் பெயரிடப்படாத காரணத்தினால், வழக்கு வரும் மார்ச் 23-ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, இந்த இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் (Trial-at-Bar) தீர்ப்பளித்திருந்தது. இருப்பினும், சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை ஆராய்ந்த உச்ச நீதிமன்றம், அந்த விடுதலையை ரத்து செய்தது.
பிரதிவாதிகளின் சாட்சியங்களைப் பதிவு செய்து, மீண்டும் புதிய தீர்ப்பை வழங்குமாறு மேல் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புலனாய்வுத் தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும், ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் “கிரிமினல் அலட்சியம்” (Criminal Negligence) செய்ததாக இவர்கள் மீது 800-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

