ஜீவன் தொண்டமானுக்கு எதிராக விசாரணை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தமது கட்சியின் ஆதரவாளர்கள் குழுவுடன் நுவரெலியா பொலிஸாருக்கு முன்பாக நடந்துகொண்ட முறை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பாதுகாப்பு அதிகாரிகளின் மூவரின் துப்பாக்கிகளும் உயர்நிலை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தலவாக்கலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு , கையகப்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் சில மணித்தியாலங்களின் பின்னர் அதே அதிகாரிகளிடமே திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொண்டமானின் அதிரடி நடவடிக்கை

நுவரெலியா மாவட்டம் உடரத்தல தோட்டத்தில் தேயிலை செய்கையை முற்றாக அழித்து, அங்கு கோப்பி செய்கையை பயிரிட களனிவெளி பெருந்தோட்ட நிர்வாகம் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அப்பகுதி மக்களால் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதனடிப்படையில், களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு எதிராக நுவரெலியா- உடரதல்ல பகுதியில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அதிரடியாக களத்தில் இறங்கியிருந்தார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான் களனிவெளி பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான பீற்று தோட்டத்தில் உள்ள தோட்ட அத்தியட்சகர் அலுவலகத்திற்கு குழுவொன்றுடன் சென்று அதிகாரிகளை அச்சுறுத்தி தேயிலை தொழிற்சாலையின் பணிகளை இடைநிறுத்தி அமைதியற்ற முறையில் நடந்துகொண்டார்.

தேயிலை செடிகளை அகற்றி, கோப்பி செய்கையை முன்னெடுப்பதற்காக, தோட்ட நிர்வாகத்தினால் கொண்டு வரப்பட்ட இயந்திரத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படும் தோட்டத் தலைவர்கள் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.

மேலும், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை வாபஸ் பெறுமாறு நுவரெலியா பொலிஸாருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேயிலை உற்பத்திகளுக்கு நட்டம் ஏற்படும் அபாயம்

எவ்வாறாயினும், தோட்ட நிறுவனம் ஒன்றின் பிரதான நிறைவேற்று அதிகாரியை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அச்சுறுத்திய காரணத்தினால் இந்த வார கொழும்பு தேயிலை ஏலத்தை புறக்கணிப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Recommended For You

About the Author: admin