திருகோணமலை, சல்லிக் கிராமத்தில் 2 தமிழ் மீனவர்களை 5 நாட்களாகக் காணவில்லை. சிங்கள மீனவர்கள் காணாமற்போனால் ஹெலிகொப்டரில் தேடும் அரசு, தமிழ் மீனவர்கள் என்பதால் பாராமுகமா? என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கடற்றொழிலுக்காக சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போய் இருக்கின்றார்கள். அவர்கள் கடந்த ஐந்து நாட்களாக கரைதிரும்பவில்லை. இதனால் கடற்றொழில் அமைப்புக்களும் அவர்களது குடும்பங்களும் மோசமான மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆனால், வேதனையான விடயம் என்னவென்றால் அந்த அப்பாவி தமிழ் மீனவர்கள் இருவரையும் மீட்பதற்கு இலங்கை அரசோ இலங்கை கடற்படையோ முன்வரவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணி, மலைத்தொடரில் இருந்து காணாமல் போயிருந்தார். அவரை மீட்பதற்கு ஹெலிகொப்டர்கள் பறந்தன. தென்னிலங்கை கடற்பரப்பில் பல சிங்கள மீனவர்கள் காணாமல் போயிருந்த சந்தர்ப்பங்களில் அப்போதும் துரிதமாக ஹெலிகொப்டர்கள் விரைந்தன.
ஆனால், கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ள இந்த தமிழ் மீனவர்களை மீட்பதற்கு ஒரு ஹெலிகொப்டர் கூட முன்வரவில்லை.
தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. ஏன்? அவர்கள் தமிழர் என்பதாலா? இது இலங்கையின் இன பாகுபாட்டை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
உடனடியாக அவர்களை தேடுங்கள். அப்பாவி மீனவர்களின் உயிர்கள் போவற்கு காரணமாகிவிடாதீர்கள். சர்வதேச சமூகமும், மனித உரிமைகள் பற்றி பேசுகின்ற அமைப்புகளும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.