மதுபோதையில் 17 வயது சிறுவன் செலுத்திய கார்: சம்பவ இடத்திலேயே பலியான இரண்டு உயிர்கள்

இந்தியாவின், புணே கல்யாணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அனிஸ் அவதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த காரை செலுத்தியது 17 வயதான சிறுவன் என்பதும் அவர் மதுபோதையில் காரை செலுத்தியும் உறுதியானது.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சிறுவனுக்கு அன்றைய தினமே நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.

நிபந்தனைகளாவன,

வீதி விபத்தின் விளைவுகள் மற்றும் அதன் தீர்வுகள் எனும் தலைப்பில் 300 பக்கத்துக்கு கட்டுரை எழுத வேண்டும்

இந்த குற்றம் இனி நடக்காது என்பதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்

தவறான நண்பர்களுடன் சிறுவன் பழகுவதை பெற்றோர் தடுக்க வேண்டும்

போக்குவரத்து விதிகளை படித்து 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

சிறுவனுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்பவையாகும்.

அத்துடன் சிறுவனுக்கு காரை செலுத்துவதற்கும் மது அருந்துவதற்கும் அனுமதி அளித்த காரணத்துக்காக சிறுவனின் தந்தையும் கட்டுமான தொழிலதிபருமான விஷால் அகர்வால் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவனுக்கு மது வழங்கிய மதுபானசாலை உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவனின் தந்தை தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை ஔரங்கபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

வெறும் 14 மணிநேரத்துக்குள் சிறுவனுக்கு பிணை வழங்கப்பட்டது குறித்து சிலர் எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

சிறுவர்கள் இதுபோன்ற பிழைகளை செய்வதற்கு எத்தனிக்கும்போது அதிலிருக்கும் ஆபத்துக்களை எடுத்துக்கூறி அவர்களை தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கு உண்டு.

அதனை சரியாக செய்யாதவிடுத்து அநியாயமாக இதுபோன்ற உயிர்சேதங்கள் தொடர்ந்தும் ஏற்படக்கூடும்.

Recommended For You

About the Author: admin