இந்தியா, விருதுநகர் மாவட்டத்தின் செங்கமலப்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் 10 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.
சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் 30க்கும் அதிகமான பட்டாசு உற்பத்தி அறைகள் உள்ளன.
இந்நிலையில் வழமைப்போல் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆலையின் ஒரு அறையில் பேன்சி ரக வெடிகள் தயாரித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென பட்டாசுகள் வெடித்துச் சிதறின.
அடுத்தடுத்த அறைகளுக்கும் தீ பரவிய நிலையில் 8 அறைகள் முற்றிலுமாக தீக்கிரையாகின.
இந்த பட்டாசு வெடிப்பில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தனர்.
தீக்காயங்களுக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
பட்டாசுகளின் உராய்வின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் போர்மேன் சுரேஷ் பாண்டியனை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, தலைமறைவாகியுள்ள ஆலையின் உரிமையாளர் சரவணனையும் ஒப்பந்ததாரர் முத்து கிருஷ்ணனையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.