நாடளாவிய ரீதியில் பாரிய எதிர்ப்பார்ப்புகளுடன் கூடிய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகாரபூர்வ வெளியீட்டை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்த நிலையில் இலங்கைத்தீவின் அரசியல் அரங்கம் மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.
அதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி தொடக்கம் ஒக்ரோபர் மாதம் 16ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டயானா கமகேவுக்கு தடை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற பதவி பறி போன நிலையில் அவருக்கு வெளிநாட்டு பயணங்களும் தடை செய்யப்பட்டது.
அமைச்சுப் பதவி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரண்டும் பறிபோன டயானா கமகேவுக்கு எதிராக மற்றுமொரு வழக்கைத் தொடரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
போலி ஆவணங்களை முன்வைத்து அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டமை தொடர்பில் குறித்த வழக்கை தொடரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மகளிர் மன்றம் கோரிக்கை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பொருத்தமான வேறொரு பெண்ணை நியமிப்பது குறித்து பரிசீலிக்குமாறு நாடாளுமன்ற மகளிர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த கோரிக்கை நாடாளுமன்ற மகளிர் மன்றத்தின் தலைவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே மூலம் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் மேலும் குறைவடைந்துள்ளமை குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சுட்டிக்காட்டியுள்ளார்.
திறமையான ஜனநாயகத்திற்கு பெண்களின் பிரதிநிதித்துவம் முக்கியமானது.
பெண்களின் அனுபவம், அறிவு மற்றும் முன்னோக்கு ஆகியவை சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பயனளிக்கும் கொள்கைகளை வகுப்பதில் பங்களிக்கின்றன என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
கட்சிப் பதிவு?
இதேவேளை, நாட்டில் பிரஜை அல்லாத ஒருவர் எவ்வாறு கட்சி ஒன்றை ஸ்தாபிக்க முடியும் என பல தரப்பினரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக பிரஜை அல்லாத ஒருவர் நாட்டில் அரசியல் கட்சியை ஆரம்பிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பிரஜை அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டயானா கமகேவின் பதவி பறிக்கப்பட்டதன் மூலம் கட்சிப் பதிவுகள் தொடர்பாக அரசியல் வட்டாரத்தில் பல கதைகள் கூறப்பட்டு வருகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி டயானா கமகேவுக்கு சொந்தமானது என்பது பலவாறு எழுப்பப்பட்டு வரும் ஒரு கேள்வி.
இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவும் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.
எரான் விக்கிரமரத்னவின் விளக்கம்
ஐக்கிய மக்கள் சக்தி மங்கள சமரவீரவினால் பதிவு செய்யப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கருத்து வெளியிட்டார்.
2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் ரஞ்சித் மத்தும பண்டார ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளராக கடமையாற்றி வருகிறார்.
அக்கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச செயல்படுகிறார்.
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வழங்கப்பட்ட போது ரஞ்சித் மத்தும பண்டார வேட்பு மனுவில் கையொப்பமிட்டதாக எரான் விக்கிரமரத்ன மேலும் தெரிவித்தார்.
4 வருடங்களாக அரச ஊதியம்
சட்டவிரோதமாக அமைச்சு மற்றும் நாடாளுமன்ற பதவிகளை வகித்து சுமார் 4 வருடங்களாக அரசாங்கத்தின் மூலம் சம்பளம் பெற்றுள்ளார். அதனையும் மீளப் பெறுவது அவசியம் என சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு கொழும்பு உச்ச நீதிமன்றம் மூலம் டயானா கமகேவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி பேசுபொருளாக மாறியுள்ளது.
ஹரின் மற்றும் மனூஷவின் நிலை
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தாவி அமைச்சுப் பதவிகளை பெற்ற ஹரின் பெர்ணாண்டோ மற்றும் மனூஷ நாணயக்கார இருவருக்கும் எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை துரிதப்படுத்துமாறு அழுத்தம் வழங்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் லக்ஷமன் கிரிஎல்ல அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
டயானா கமகேவுக்கு நடந்தது இன்னும் இருவருக்கு வெகு விரைவில் நடக்கும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் தெரிவித்திருந்தார்.
சட்டத்தின் கையில் கட்சியின் எதிர்காலம்
இவ்வாறான பின்னணியில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட சில கட்சிகளின் எதிர்காலம் சட்டத்தின் கைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து நகர்த்தப்பட்டு வரும் இந்த காய்நகர்த்தல்கள் அரசியல் இலாபங்களை நிறைவேற்றுபவை மாத்திரமே.
சாதாரண மக்களின் அன்றாட பிரச்சினைகள் இன்றும் அதே நிலையிலே.