ஜனநாயகத்தை அழிக்க சதி செய்த காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் பெலகாவியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் மோடி,
”கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பலம் மிக்க நாடாக மாறியுள்ளது.இதற்கு அனைவரும் பெருமைப்பட வேண்டும். ஆனால் இந்தியாவின் சாதனைக்காக காங்கிரஸ் வெட்கப்படுகிறது.
தேச நலனிலிருந்து காங்கிரஸ் விலகி வெகு தூரம் சென்றுவிட்டது. குடும்ப நலனில் தான் மூழ்கியுள்ளது.நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க காங்கிரஸ் சதி செய்தது. இதற்காக அவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
வயநாடு தொகுதியில் வெற்றி பெறுவதற்காக தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ. அமைப்பிடம் காங்கிரஸ் உதவி பெற்றுள்ளது.மக்களின் சொத்துக்களை 55 சதவீதம் பறிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததிலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஹூப்ளியில் நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் மீண்டும் சமாதானத்துக்கு முன்னுரிமையளித்தது.
நேஹா போன்ற எங்கள் மகள்களின் உயிருக்கு மதிப்பில்லை. அவர்களுக்குஅவர்களின் வாக்கு வங்கி மாத்திரமே முக்கியமாக காணப்படுகிறது” என ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.