அரசாங்கத்தினால் இலவசமாக விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றதாகவும் மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை இலக்காக கொண்டு இந்த அரிசி மானியத்தை வழங்க அரசாங்கம் அண்மையில் தீர்மானித்துள்ளது.
அந்த வேலைத்திட்டத்தின் பிரகாரம் பதுளை மாவட்டத்தில் விநியோகிக்கப்படும் அரிசி தரம் குறைந்ததாகவும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அதே தொகைக்கு அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய பிரதமர் தினேஷ் குணவர்தன, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரன்னவிடம் இது தொடர்பில் ஆராயுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.