கம்போடியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள இராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் சுமார் 20 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக கம்போடிய பிரதமர் ஹன் மானெட் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் உள்ள இராணுவ தளத்தில் சனிக்கிழமை பிற்பகல் இந்த வெடிப்பு சம்பவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெடிப்பு சம்பவம் குறித்த செய்தி அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியடைவதாக கம்போடிய பிரதமர் ஹன் மானெட் தமது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
இருப்பினும், வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெடிப்பு காரணமாக அந்தப் பகுதியை அண்மித்த கிராம மக்களின் குடியிருப்புகள் சிலவற்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தளத்தில் இராணுவ அதிகாரி கேர்னல் யூங் சோகோன் தெரிவித்துள்ளார்.
ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஏனைய பல நாடுகளைப் போன்று கம்போடியாவும் அதிக வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பு ஏற்பட்ட தினத்தில் கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் வெப்ப நிலை அதிகபட்சமாக 39 செல்சியஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகரித்த வெப்பத்தின் காரணமாக பொதுவாக வெடிமருந்துகளை வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படாத போதிலும், எதிர்வினைய ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதால் அது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.