மன்னார், முசலி, எஸ்.பி. பொற்கேணி கிராம மக்களின் குடிநீர்த் தேவையை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை நிவர்த்தி செய்துள்ளது.
இந்தவகையில்,குறித்த கிராம மக்களுக்காக லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு (17.04.24) மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
மன்னார், முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எஸ்.பி. பொற்கேணி கிராமத்தில் வாழ்ந்து வரும் நூற்றுக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு, முறையான குடிநீர் வசதி இல்லாதமை நீண்ட கால பிரச்சினையாக இருந்து வந்தது.
குறித்த கிராமத்தில் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், மக்களின் குடிநீர் தேவையை இதுவரை எந்த அரச அதிகாரிகளும், அரசியல் பிரதிநிதிகளும் தீர்த்து வைக்கவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இம்மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்துவந்த குடிநீர் தேவையை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை இன்று நிவர்த்தி செய்துள்ளது.
அந்தவகையில், லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதியுதவியின் கீழ் குழாய் நீர் கிணறுகள் அமைக்கப்பட்டதுடன், அவை நேற்று வைபவ ரீதியாக மக்களின் பாவனைக்காவும் கையளிக்கப்பட்டன.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன், மத தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் லைக்காவின் ஞானம் அறக்கட்டளை பணியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்திருந்த குறித்த கிராமத்தவர்கள், பல வருடங்களாக தாங்கள் குடிநீர் வசதி இன்றி பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வந்ததாகவும், தற்போது லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த செயற்பாடானது, தங்களுக்கு பெரும் நன்மையாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.
சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.