தமிழ் இன அழிப்புத் தொடர்பில் கனடாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னத்தை இலங்கையால் தடுத்து நிறுத்த முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள பிராம்ப்டன் நகர சபை தமிழ் இனப்படுகொலை நினைவிடத்திற்கான இறுதி வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்து நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக பிரமாலியா பகுதியில் உள்ள Chinguacousy பூங்காவில் 4.8 மீட்டர் உயரமுள்ள துருப்பிடிக்காத எஃகு நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 18 ஆம் திகதி புலம்பெயர் நாடுகளில் தமிழ் இனப்படுகொலை நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் கட்டியெழுப்ப கனடாவில் உள்ள நகர சபையின் முயற்சிகளை முறியடிப்பதற்கும் இனப்படுகொலைத் தொடர்பில் கனேடிய அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதிலும் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் போர் வெற்றியைக் குறிக்கும் போது இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை கனேடிய அரசியல் தலைவர்கள் முன்வைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த விடயம் குறித்து இலங்கை மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் குறித்த இராஜதந்திர அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் இனப்படுகொலை குறித்து கனடா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த போதிலும், இலங்கை அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது.
கடந்த ஆண்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இனப்படுகொலை தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து இரு நாடுகளுக்கும் இடையில் பெரும் இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.
அதேவேளை இன அழிப்பு என்று கனாடவின் இரு பெரும் தேசியக் கட்சிகளும் கூறி வந்தாலும் கனடா அரசின் இலங்கை பறறிய வெளியுறவுக் கொள்கையில் இனஅழிப்பு விவகாரம் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.