இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் ஐந்து ஆட்டங்களில் மூன்று அரை சதங்களை விளாசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரியான் பராக், ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஐபிஎல் போட்டியில் அவரது கவனம் இருக்க வேண்டும் என ராஜஸ்தான் அணி பயிற்றுவிப்பாளர் குமார் சங்கக்கார விரும்புகிறார்.
நேற்றுமுன்தினம் புதன்கிழமை (ஏப்ரல் 10) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியுற்றது.
அந்த ஆட்டத்தில் பராக் 76 ஓட்டங்களை எடுத்தார். நடப்பு பருவத்தில் இதுவரை மொத்தம் 261 ஓட்டங்களை எடுத்துள்ள அவர், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரின் விராத் கோஹ்லிக்கு அடுத்த நிலையில் உள்ளார்.
ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான இந்திய அணியில் பராக், இடம்பெறுவாரா என்பது பற்றி தமக்குத் தெரியாது என்று செய்தியாளர்களிடம் கூறிய சங்கக்கார, தாம் எவ்வளவு சிறப்பாக விளையாட முடியும் என்பதை பராக்கின் ஆட்டத்திறன் காண்பித்துள்ளதாக கூறினார்.