பாதை சீரின்மை – கர்ப்பிணிக்கு நடுரோட்டில் பிரசவம்

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாமராஜு மாவட்டம் சிடிவலசா மலைக்கிராமத்தில் 22 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மலை கிராமத்தில் குண்டும் குழியுமான சாலையில் ஆம்புலன்ஸ் வர முடியாத நிலையில் பிரசவத்திற்காக 1 கி.மீ. தூரம் நடந்து சென்ற நிறைமாத கர்ப்பிணிக்கு நடுரோட்டிலேயே குழந்தை பிறந்தது.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இதே கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாஸ்கரராவ். இவரது மனைவி வசந்தா(28). தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3ஆவதாக வசந்தா கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்றுமுன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆனால், கிராமத்தில் சாலை சேதமாகி குண்றும் குழியுமாக உள்ளதால் ஆம்புலன்ஸ் கிராமத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தை கடந்து நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு கர்ப்பிணி வசந்தாவை உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் நடக்க வைத்து அழைத்து சென்றனர்.

சுமார் 1 கி.மீ. தூரம் நடந்து சென்றதும், பிரசவ வலி அதிகமானதால் வசந்தா துடி துடித்துள்ளார்.

இதையடுத்து நடுரோட்டிலேயே பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விரைந்து வந்து மருத்துவ உதவி செய்து ஆம்புலன்சில் ஏற்றிச்சென்றனர்.

அங்கிருந்து ஹூக்கும்பேட்டை மண்டல ஆரம்ப சுகாதார வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு தாயுக்கும் சேயுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் மலைக்கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மலை கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலை சேதமாகி உள்ளதால் நோயாளிகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் உரிய நேரத்தில் வைத்தியசாலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கும் வசதி இல்லை. எனவே, இந்த சாலையை சீரமைக்கும்படி அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin