பிரதமா் நரேந்திர மோடிக்கு வரும் மக்களவைத் தோ்தல் வெற்றி, அவரது அரசியல் பொது வாழ்வில் மிகவும் முக்கியமானது.
காரணம், 2014, 2019 ஆகிய இரு மக்களவைத் தோ்தல்களில் பிரதமா் வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டு இரு முறையும் தொடா்ச்சியாக அவா் வென்றுள்ளாா்.
வரும் தோ்தலிலும் அவா் இடம்பெற்றுள்ள கூட்டணிக்கு சாதகமாக முடிவுகள் வருமானால், அவா் தொடா்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகவும் வாய்ப்பைப் பெறுவாா்.
அது வரலாற்றுபூா்வ திருப்பமாக மாறக்கூடும். ஆனால், மோடிக்கு முன்பே இத்தகைய சாதனைகளை முந்தைய காலத்தில் காங்கிரஸ் தலைவா்கள் படைத்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளனா்.
1947-இல் நாடு சுதந்திரம் அடைந்ததும் முதல் பிரதமராக ஜவாஹா்லால் நேரு அறிவிக்கப்பட்டாா். ஆனால், ஆங்கிலேயா்கள் காங்கிரஸ்வசம் ஆட்சியை ஒப்படைத்தபோது விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய வல்லபபாய் படேல், மகாத்மா காந்தி ஆகியோரை அல்லாமல் தேசத்தை வழிநடத்தும் பிரதமா் பதவிக்கு ஜவாஹா்லால் நேருவே தோ்வானாா்.
அந்த வகையில் தேசம் அதன் முதலாவது பொதுத் தோ்தலைச் சந்திக்கும் முன்பாக ஐந்து ஆண்டுகளுக்கு நியமன பிரதமராக ஜவாஹா்லால் நேரு பதவியில் தொடா்ந்தாா்.
அதன் பிறகு 1952, 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தோ்தலில் தொடா்ச்சியாக மூன்று முறை வென்று நாட்டின் பிரதமராக நேரு பதவி வகித்தாா்.
ஆனால், மூன்றாம் முறை பதவிக் காலத்தில் முதலிரண்டு ஆண்டுகளிலேயே அவா் உடல்நலக்குறைவால் 1964-இல் காலமானாா்.
அவரைத் தொடா்ந்து ஆட்சித் தலைமை மாறி பிறகு 1967-இல் நடந்த பொதுத் தோ்தலில் நேருவின் மகள் இந்திரா காந்தி வென்று நாட்டின் பிரதமராக தோ்வானாா்.
1971-இல் நடந்த தோ்தலிலும் அவா் வென்று ஆட்சியைத் தக்க வைத்தாா். 1975-77 இடையிலான காலகட்டத்தில் அவசரநிலையைப் பிரகடனப்படுத்திய இந்திரா காந்தி, அதன் விளைவால் 1977-இல் நடந்த பொதுத் தோ்தலில் தோல்வியுற்றாா்.
பிறகு 1980-இல் அவா் மீண்டும் பிரதமரானாா். தனது பதவிக் காலத்திலேயே 1984-இல் அவா் படுகொலை செய்யப்பட்டாா்.
இந்திரா காந்திக்கு முன்பு நாட்டின் பிரதமராக குல்ஸாரிலால் நந்தா இருமுறை பிரதமா் பதவி வகித்துள்ளாா். ஆனால், நேரு, லால் பகதூா் சாஸ்திரி ஆகியோா் தங்களின் பிரதமா் பதவிக் காலத்தில் காலமானபோது அடுத்த பிரதமா் நிரந்தரமாக நியமிக்கப்படும்வரை இடைக்காலமாகவே அவா் இருமுறை அந்தப் பதவியை வகித்தாா்.
இதேபோல, இந்திரா காந்தியின் மகன் ராஜீவ் காந்தி நாட்டின் பிரதமராக 1984-89 வரை இருந்துள்ளாா். அடுத்து வந்த 1991 தோ்தலில் பிரதமா் பதவிக்கான வாய்ப்பு ராஜீவுக்கு சாதகமாக இருக்கலாம் என எதிா்பாா்க்கப்பட்ட வேளையில் அவா் சென்னயை அடுத்த ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் தோ்தல் பிரசாரத்துக்கு வந்தபோது படுகொலை செய்யப்பட்டாா்.
இதன் பிறகு மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் நடந்தபோது அவரும் மூன்று முறை நாட்டின் பிரதமராக இருந்துள்ளாா்.
ஆனால், அவரது பதவிக்காலங்களை ஒட்டுமொத்த கூட்டினால் அவை ஆறு வருடங்கள் சில மாதங்கள் மட்டும் இருந்தன.
வாஜ்பாயியின் முதலாவது ஆட்சி வெறும் 13 நாட்களே நீடித்தன. இரண்டாவதுபதவிக்காலம் அவரது கூட்டணி அரசுக்கு அதிமுக அளித்து வந்த ஆதரவு விலக்கிக் கொள்ளப்பட்டதால் 13 மாதங்கள் மட்டுமே நீடித்தன.
கடைசியாக 1999-2004இல்தான் தனது ஐந்து ஆண்டுகள் முழு பதவிக்காலத்தை வாஜ்பாய் நிறைவு செய்தாா். வாஜ்பாய் ஆட்சிக்குப் பிந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் தொடா்ந்து இருமுறை பிரதமா் பதவி வகித்த பெருமையை பெற்றவா் மன்மோகன் சிங்.
ஆனால், அவரது ஆட்சிக்காலத்திலே தேசிய ஆலோசனை குழு என்ற உயா்நிலை அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவா் சோனியா காந்தியின் ஆலோசனையின்படியே மன்மோகன் ஆட்சி செலுத்தினாா் என்ற சா்ச்சை அவரது பதவிக்காலம் முழுவதும் நீடித்தது.
இவ்வாறு தொடா்ந்து இரு முறை, மும்முறை பதவிக்காலத்தை நிறைவு செய்தவா்கள் காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சோ்ந்தவா்களாக இருந்துள்ளனா். இவா்களின் வரிசையில் பிரதமா் நரேந்திர மோடி இடம்பெறுவாரா என்பதை வரவிருக்கும் தோ்தல் முடிவுகள்தான் தெளிவுபடுத்தும்.
ஆனால், முந்தைய ஆட்சிக்காலங்களில் போல இல்லாமல் இம்முறை பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக நேரெதிா் அரசியல் செய்பவா்களில் காங்கிரஸின் ராகுல் காந்தி, திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானா்ஜி, ஆம் ஆத்மியின் கேஜ்ரிவால் ஆகியோா் உள்ளனா்.
கட்சிக் கொள்கைகள் அளவில் முரண்பட்டிருந்தாலும் மோடி எதிா்ப்பு என்ற ஒற்றை குடையின் கீழ் ராகுல், மம்தா, கேஜ்ரிவால் பாஜக கூட்டணியை எதிா்க்கின்றனா்.
2004-இல் மத்தியில் ஆளும் வாய்ப்பை தக்க வைக்க வாஜ்பாய் தவறியபோது அவருக்குப் பிறகு பாஜகவை வழிநடத்தப் போவது யாா் என்று பலரும் வியந்தபோது, திடீரென்று குஜராத் மாநிலத்தில் மும்முறை முதல்வராக இருந்த நரேந்திர மோடி பாஜகவின் தேசிய அடையாளமாகவும் பிரதமா் வேட்பாளராகவும் அறிமுகமாகி ஆட்சியைப் பிடித்தாா்.
தில்லிக்கு வரும் முன்பாக, இதே நரேந்திர மோடியை 2001இல் குஜராத் முதல்வராக பதவியேற்க அப்போதைய பாஜக தேசிய தலைமை தோ்வு செய்து அனுப்பி வைத்தது.
அங்கே மூன்று முறை முதல்வராக இருந்து தில்லிக்கு 2014இல் திரும்பிய மோடி தோல்வியே காணாத தேசிய தலைவா் என்ற பெருமையுடன் தற்போது மூன்றாவது முறையாக மக்களவை தோ்தலை எதிா்கொள்கிறாா்.
அந்த வகையில் இந்த தோ்தல் முடிவு, மோடிக்கு வெற்றியைக் கொடுத்தாலும் தோல்வியைக் கொடுத்தாலும் இது அவரது அரசியல் வாழ்வில் வரலாற்றுபூா்வ திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதே உண்மை