சீனாவினால் 2022 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த கடன் தவணைக்கு கொடுப்பனவு நிவாரணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் சீன அரசாங்கம் ஏற்கனவே இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அறியமுடிகிறது.
இதன்படி, கடன் தொகையை மீள செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு சீன அரசாங்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், பிரமர் தினேஷ் குணவர்தனவின் திடீர் சீன விஜயம் கடன் நிவாரணத்தை மேலும் நீடிப்பதற்காகவா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இலங்கை சீனாவிடமிருந்து 26.4 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை பெற்றுக்கொண்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்குப் பின்னர் குறித்த கடன் தொகையை மீள செலுத்தாதிருப்பதற்கு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி முதல் இரண்டு வருடகால அவகாசத்தை சீனா வழங்கியிருந்தது.
அத்துடன், குறித்த கால அவகாசம் முடிவடைந்த பின்னர் மீண்டும் கடன் தொகையை இலங்கை செலுத்த ஆரம்பிக்க வேண்டும் என சீனா தெரிவித்திருந்தது.
இதன்படி, இலங்கைக்கு சீனா வழங்கிய இந்த கால அவகாசம் முடிவடைவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன.
இந்த நிலையில், மீண்டும் சலுகைக் காலத்தை நீடிக்குமாறு இலங்கை கோரிய போதிலும், அவ்வாறு வழங்கும் நிலையில் ஏனைய நாடுகளும் இதேபோன்று கடன் சலுகைக் காலத்தை கோரும் என சீனா தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் பல சீனாவுக்கு சுமார் 600 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பின்னணியில், கடன் தொகையை செலுத்துவதற்கு இலங்கைக்கு மாத்திரம் கால அவகாசம் வழங்கப்படுமாயின், ஏனைய நாடுகளும் இதே கோரிக்கையை முன்வைக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும், இவ்வாறு நடக்குமாயின் கடுமையான நெருக்கடியை தோற்றுவிக்கும் எனவும் சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் கடனை மீள செலுத்த ஆரம்பிக்குமாறு இலங்கையை வலியுறுத்தும் சீனா, அதன் பின்னர் நடுப்பகுதியில் சற்று நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.