இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக பங்களாதேஷ் அணி மூன்று போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் பங்கேற்பதற்காக எதிர்வரும் மே மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
அமெரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளும் இதற்கு முன்னதாக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டது இல்லை.
அத்துடன், பங்களாதேஷ் தமது வரலாற்றில் அமெரிக்காவில் இரண்டு இருபதுக்கு 20 போட்டிகளை எதிர்கொண்டுள்ளது.
இந்த பின்னணியில், அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்தும் உலகக் கிண்ண தொடருக்கான தயார்படுத்தலாக பங்களாதேஷ் இந்த தொடரை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், பங்களாதேஷ் அணியின் அமெரிக்க சுற்றுப்பயணம் 2024 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. உலகக்கிண்ண தொடரை எதிர்கொள்வதற்கு சிறந்த களமாக அமையும் என பங்களாதேஷ் கிரிக்கெட் பேரவையின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஐ.சி.சி. உலகக்கிண்ண தொடரில் இந்தியா, அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்து கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் A குழுவில் அங்கம் வகிக்கின்றன.
பங்களாதேஷ் அணி குழு D இல் இடம்பிடித்துள்ள நிலையில், நேபாளம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
இதனிடையே, எதிர்வரும் ஏப்ரல் மாதம் கனடாவுடன் ஐந்து போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் அமெரிக்கா விளையாடவுள்ளது.
டெக்சஸின் ஹூஸ்டனில் உள்ள ப்ரேரி வியூ வளாகத்தில் அனைத்து போட்டிகளும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.