ஐசிசி ஒருநாள் தரவரிசை: இலங்கை அணிக்கு பின்னடைவு..!
சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை அணி ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
கொழும்பில் நேற்று (27) நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இழந்ததன் காரணமாகவே, 5ஆவது இடத்தில் இருந்த இலங்கை அணி 6ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இங்கிலாந்து அணி தொடர்ந்தும் 8ஆவது இடத்திலேயே நீடிக்கிறது. 7ஆவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி தரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று இங்கிலாந்து பெற்ற இந்தத் தொடர் வெற்றியானது, 2023 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அந்த நாடு தனது சொந்த மண்ணுக்கு வெளியே பெற்ற முதலாவது ஒருநாள் தொடர் வெற்றியாகக் கருதப்படுகிறது.
இந்தத் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் நியூசிலாந்தும், மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியாவும் உள்ள அதேவேளை, பாகிஸ்தான் அணி 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

