இந்தோனேசியாவில் நிறுவப்பட்டது முதல் இந்து பல்கலைக்கழகம்

இந்தோனேசியாவில் முதல் இந்துப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஜனாதிபதியின் ஒழுங்குமுறை அதிகாரத்தின் கீழ் இப்பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய இந்து பல்கலைக்கழகத்துக்கு ‘ஐ கஸ்தி பகஸ் சுக்ரிவா ஸ்டேட் இந்து யுனிவர்சிட்டி என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் பாலி தீவில் இயங்கிவரும் இந்து தர்ம அரசு கல்வி நிறுவனத்தையே பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்துவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி ஜோகோவி விடோடோ ஆணையிட்டுள்ளார்.

உலகளாவிய சுற்றுலா மையமாக விளங்கும் இந்த பாலித்தீவில் கடந்த 1993ஆம் ஆண்டு இந்து மத ஆசிரியர்களால் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்தோனேசியாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பினும், அதன் கட்டுப்பாட்டிலுள்ள பாலி தீவில் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழ்கின்றனர்.

இதன் பின்னணியிலேயே கடந்த 1999ஆம் ஆண்டு இந்து மத அரசு கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது.

பாலி தீவின் தலைநகர் டென்பசாரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்தக் கல்லூரி கடந்த 2004ஆம் ஆண்டு இந்து தர்ம அரசு நிறுவனமாக மீண்டும் தரம் உயர்த்தப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே இந்நிறுவனத்துக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கும் ஆணையில் ஜனாதிபதி ஜோகோவி விடோடோ கையெழுத்திட்டுள்ளார்.

இந்து உயர் கல்விக்கான அனைத்து அம்சங்களையும் இந்தப் பல்கலைக்கழகம் உள்ளடக்கி செயல்ப்படுகின்றது. இதன் மூலம் குறித்த கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் உடனடியாக ‘ஐ கஸ்தி பகஸ் சுக்ரிவா ஸ்டேட் இந்து யுனிவர்சிட்டி மாணவர்களாக மாற்றப்படுவார்கள்.

இந்து தர்ம அரசு நிறுவனத்தின் சொத்துகள், ஊழியர்கள் உட்பட அனைத்தும் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதியின் ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin