பாகிஸ்தானில் புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளதுடன் ஷாபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ஷாபாஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவுடனான இராஜதந்திர உறவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பாகிஸ்தான் தனது தேசிய தினத்தை எதிர்வரும் 28ஆம் திகதி இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் நடத்த முடிவு செய்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் மோசமடைந்து வருவதால் நான்கு வருட இடைவெளிக்குப் பின்னர் பாகிஸ்தான் தனது தேசிய தினத்தை டெல்லியில் கொண்டாடத் தயாராகி வருகிறது.
1940 ஆம் ஆண்டு முஸ்லீம் லீக் லாகூர் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதை குறிக்கும் வகையில் பாகிஸ்தானின் தேசிய தினம் வழக்கமாக மார்ச் 23 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
ஆனால் இம்முறை மார்ச் 28 ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
சுதந்திரத்திற்கு முன்னர் கடந்த 1940 ஆம் ஆண்டு மார்ச் 22 முதல் மார்ச் 24 வரை லாகூரில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் லீக் கூட்டத்தில் லாகூர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு ஒரு முறையான சுதந்திர அரசு வேண்டும் என அது கோரப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்தில் பாகிஸ்தான் என்ற வார்த்தை எங்கும் குறிப்பிடப்படவில்லை. லாகூர் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளை பாகிஸ்தான் தனது தேசிய தினமாக கொண்டாடி வருகிறது.
1956 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் திகதி பாகிஸ்தான் தனது முதல் அரசியலமைப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தானின் இஸ்லாமிய குடியரசாக மாறியது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இடத்தில் 1960 ஆம் மற்றும் 1968 ஆம் ஆண்டுக்கு இடையில் மினார்-இ-பாகிஸ்தான் நிர்மாணிக்கப்பட்டது. தீர்மானத்தின் விபரங்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக வளாகத்தில் மார்ச் 28ஆம் திகதி தனது தேசிய தினத்தை கொண்டாட பாகிஸ்தான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளின் தூதுவர்கள் மற்றும் இந்தியர்கள் பங்கேற்பார்கள். இவ்விழாவில் இரு நாடுகளின் தேசிய கீதங்கள் பாடப்படும். அதன்பின், பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரும், பிரதம அதிதியும் உரை நிகழ்த்தவுள்ளனர்.