ஈழத்தமிழர்களை வெருட்டும் இந்திய இராஜதந்திரம்

சாந்தனின் மரணம் இந்திய – இலங்கை அரசுகளுக்குப் பல செய்திகளைச் சொல்லியிருக்கிறது. ஆனால் ஈழத்தமிழர் விவகாரம் 2009 மே மாதம் விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் முடிவுக்கு வந்துவிட்டதென்றே புதுடில்லி கருதுகின்றது. இலங்கையும் சர்வதேச அரங்கில் அவ்வாறுதான் பிரச்சாரம் செய்கின்றது.

அதேவேளை இந்தியா ஒரு பெரிய நாடு நாங்கள் சொல்வதையே தமிழர்கள் கேட்க வேண்டும், இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் மாத்திரமே உறவு வைத்துக்கொள்ள முடியும், சீனாவுடன் எல்லை மோதல் இருந்தாலும் சீன – இந்திய உறவு பற்றி ஈழத்தமிழர்கள் பேசவே கூடாது, ஆனால் வடக்கு கிழக்கில் அபிவிருத்தி என்ற பெயரில் சீனா கால்பதிக்க முற்பட்டால் அதனைத் தமிழர்கள் எதிர்க்க வேண்டும் என்று புதுடில்லி எதிர்பார்க்கிறது.

புதுடில்லியின் செயற்பாடு

இதனைத்தவிர ஈழத்தமிழர் பற்றி இந்தியாவுக்கு எந்தச் சிந்தனையும் இல்லை. சாந்தன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் அவரை யாழ்ப்பாணம் அனுப்பிவைக்க வேண்டும் என்பது புதுடில்லியின் பிரச்சினையல்ல. அது சாந்தனின் தனிப்பட்ட விவகாரம் அல்லது ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய ஒத்துழைத்தவருக்கு இதுதான் தண்டனை என்ற தொனியிலும் புதுடில்லி செயற்பட்டிருந்தது.

ஆனால் ஈழத்தமிழர்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் அல்லது இந்தியா நினைப்பதை ஈழத்தமிழர்கள் செய்து முடிப்பர்கள் அல்லது சொல்லுக் கேட்பார்கள் என்று புதுடில்லி இனிமேலும் எதிர்பார்க்க முடியாது.

ஏனெனில் சாந்தனின் மரணமும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட மக்களின் உணர்வுகளும் இந்தியாவுக்கு எதிராகவே இருந்ததை அவதானிக்க முடிந்தது.

அதுமாத்திரமல்ல இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் அதாவது சிங்கள அரசியல் தலைவர்களுடன் மாத்திரம் இந்தியா உறவைப் பேணிவருகின்றது. ஈழத்தமிழர்களைப் புறக்கணிக்கின்றது என்ற உணர்வுகளும் அந்த மக்கள் மத்தியில் தென்பட்டன.

இனிமேல் இந்தியாவுக்கு முடியாது

ஆகவே இவதுவரை காலமும் அதாவது 2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பயன்படுத்தி வடக்குக் கிழக்கில் தமக்குத் தேவையான புவிசார் அரசியல் நலனில் மாத்திரம் ஈடுபட்டு வந்த இந்தியா, இனிமேலும் தமிழ்த்தேசியக் கட்சிகளை நம்பி எதுவும் செய்ய முடியாது, மக்கள்தான் இனிப் பதில் சொல்வர் என்ற ஆழமான உணர்வுகளும் வெளிப்பட்டிருந்தன.

ஆகவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கட்சிகள் கூடுதல் ஆசனங்களைப் பெற முடியாத நிலை ஏற்படலாம். அத்துடன் தேர்தலில் வாக்குகளை நிராகரிக்கும் அல்லது வாக்களிக்கமால் தவிர்க்கும் போக்குகளும் மக்கள் மத்தியில் அதிகரிக்கலாம்.

ஏனெனில் தமிழ்த்தேசியக் கட்சிகள் மீது வெறுப்பும் நம்பிக்கையீனங்களும் மக்களிடம் அதிகரித்து வருகின்றன. அதுவும் சாந்தனை யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வருவதில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் தமிழ்த்தேசியக் கட்சிகள் மேற்கொள்ளவில்லை என்ற உணர்வும் கோபமும் மக்களிடம் மேலோங்கியுள்ளன.

அத்துடன் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர ஏனைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தவும் இல்லை. அனுதாப அறிக்கைகூட வெளியிடவும் இல்லை.

இந்தியாவை எதிர்க்கும் மனநிலை

அவ்வளவு தூரத்துக்கு இந்தியாவுக்கு இவர்கள் அஞ்சுகின்றனர் என்பது மக்களுக்கு இப்போது தெளிவாகப் புரிந்துவிட்டது.

ஆகவே இந்தியா என்ற ஒரு பெரிய சக்தியை சாதாரண மக்கள் நேரடியாக எதிர்க்கும் மனநிலை உருவாகியுள்ளது. ஆனால் இது எந்தளவு தூரத்துக்குச் சாத்தியப்படும் அல்லது இந்தியா தன்னை மாற்றிக் கொள்ளும் என்று தற்போதைக்கு அனுமானிக்க முடியாது.

அத்துடன் ”தான் ஒரு பெரிய சக்தி – தான் சொல்வதையே நீ கேட்க வேண்டும்” என்ற ஈழத்தமிழர்களை நோக்கிய இந்தியாவின் அதட்டல் தொனி உடனடியாகக் கைவிடப்படக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறமுடியாது.

ஆனால் ஒரு சிறிய தேசிய இனம் ஒன்றின் அரசியல் விடுதலையை 24 மணி நேரத்துக்குள் செய்து முடிக்கக்கூடிய வல்லமை இந்தியாவுக்கு உண்டு.

இருந்தாலும் தமது புவிசார் அரசியல் – பொருளாதார நலன் அடிப்படையில் இலங்கை அரசு என்ற கட்டமைப்புக்கு விசுவாசமாகவும் விட்டுக் கொடுக்கும் அல்லது பணிந்துபோகும் இராஜதந்திரத்துடனும் மாத்திரமே புதுடில்லி இயங்கி வருகின்றது.

இந்தியாவின் இந்த இராஜதந்திரம் வெட்கக் கேடானது.

அதேநேரம் 2009 இற்குப் பின்னர் பலம் இழந்து போயுள்ள ஈழத்தமிழ்ச் சமூகத்தை வெருட்டும் இராஜதந்திரம் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவுக்குப் பாதுகாப்பானதுமல்ல.

அதாவது இதன் பொருள் சீனா ஆதிக்கத்துக்கே வழி வகுக்கும் என்பதாகும். அதுவும் இலங்கையின் முழு ஒத்துழைப்புடன்.

Recommended For You

About the Author: admin