இலங்கைத் தீவில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வருகிறது. இதற்கான கூட்டணிகளை அமைக்கும் பணிகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இந்தத் தேர்தலில் பலம் வாய்ந்த மூன்று வேட்பாளர்கள் களமிறங்குவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. தற்போதைய ஜனாதிபதி ஆளுங்கட்சி கூட்டணியில் போட்டியிட பரந்தப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் சஜித் பிரேமதாச போட்டியிட உள்ளார். அதற்கு அடுத்தப்படியாக தேசிய மக்கள் சக்தி உள்ளது.
பசில் கையில் தீர்மானம்
வழமைக்கு மாறாக இம்முறை தேசிய மக்கள் சக்தியின் மீதே மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதுவொரு பலம்வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு உள்ள கூட்டணியாக தேசிய மக்கள் சக்தி உள்ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில் அண்மைக்காலமாக சில கருத்துக் கணிப்புகளும் வெளியாகி வருகின்றன.
ஆளுங்கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.
ரணிலை விரும்பும் மஹிந்த
ஆளுங்கட்சிக்குள் வேட்பாளர் தெரிவு இறுதிபடுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இலங்கை திரும்பியதும் இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவும் மஹிந்த ராஜபக்ச ஷங்ரிலா ஹோட்டலில் அடிக்கடி சந்திப்புகளை நடத்தி வருவதாக தெரிய வருகிறது.
கடந்த வாரமும் இரவு விருந்துடன் இருவரும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் சமகால அரசியல் நெருக்கடிகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்துவதில் மஹிந்த ராஜபக்சவுக்கு அதிகளவான விருப்பம் உள்ளதாகவும் தெரிய வருகிறது.