முன்னாள் இராணுவத் தளபதியும், இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்தார்.
இலங்கை இராணுவத்தின் 54 இராணுவத் தளபதியாக கடமையாற்றிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே இன்று (23) எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட இவர் ‘ஊழல் எதிர்ப்பு கொள்கை மற்றும் அமுலாக்கல் பிரிவின் பிரதானியாகவும்’ சஜித் பிரேமதாசவின் ஊழல் எதிர்ப்புப் பயணத்தின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் இராணவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி இணைந்திருந்தார்.
இந்த விவகாரம் கட்சிக்குள் பெரும் பிளவுகள் ஏற்பட வழிவகுத்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இருந்த பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு இவரது இணைவு தொடர்பில் எவ்வித அறிவிப்புகளையும் சஜித் பிரேமதாச வழங்கியிருக்கவில்லை.
தயா ரத்நாயக்கவின் இணைவுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த சரத் பொன்சேகாவுக்கு கட்சியில் செயல்பாட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் புதிய அரசியல் இயக்கமொன்றை உருவாக்கி வருகின்றார்.
ஐக்கிய மக்கள் சக்திக்குள் இந்த விவகாரம் எதிர்காலத்தில் பாரிய பிளவுகளுக்கு வழிவகுகக் கூடும் என கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிவதுடன், சஜித் பிரேமதாசவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்க எதிர்பார்த்திருந்த சில சிறுபான்மைக் கட்சிகள் இந்த விடயம் தொடர்பில் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிய வருகிறது.
முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைவருமான தயா சந்தகிரி, ஐக்கிய மக்கள் சக்தியில் அண்மையில் இணைந்ததுடன், கட்சியின் கடல் மற்றும் கடற்படைக் கொள்கைகளுக்கான ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.