ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் மற்றும் பொறுப்புக் கூறல் விடயங்கள் குறித்து மார்ச் மாதம் 4 ஆம் திகதி கவனத்தில் கொள்ளப்பட உள்ளது. ஆணையாளரின் வாய்மூல விளக்கமளிப்பும் இடம்பெறவுள்ளது.
கூட்டத்தொடரில் கலந்துகொள்ள வெளிவிவிகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று மார்ச் முதல் வாரத்தில் ஜெனிவா செல்ல உள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டத்தொடரில் மனித உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்க பொறிமுறைகளில் இலங்கை அடைந்துள்ள இலக்குகள் தொடர்பில் முழுமையான அறிக்கையை சமர்பிக்க உள்ளதாக அலி சப்ரி, அண்மையில் கூறியிருந்தார்.
இலங்கைக்கு எதிர்ப்புகள் வெளியாகும்
கடந்த ஆண்டு இடம்பெற்ற 54ஆவது கூட்டத்தொடரில் ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை வாசிக்கப்பட்டது.
மனித உரிமைகள் விவகாரம் மற்றும் பாதிப்பட்ட தரப்புக்கு நீதியை வழங்கும் செயல்பாட்டில் இலங்கை மந்தகதியில் செயல்படுவதாக ஆணையாளர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இம்முறை இலங்கை அரசாங்கத்தின் மீது சில அழுத்தங்களை மனித உரிமைகள் பேரவை பிரயோகிக்கும் என மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
நிகழ்நிலை காப்புச் சட்டத்தால் ஊடகச்சுதந்திரத்துக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்பட்ட்டன.
அதேபோன்று பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கும் கடுமையான எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்றன.
இந்த விவகாரங்கள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.