சிலிகுரி உயிரியல் பூங்காவில் ‘சீதா’ என்ற பெண் சிங்கத்தையும்’அக்பர்’ என்ற ஆண் சிங்கத்தையும் ஒரே பகுதிக்குள் அடைத்து வைப்பதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், இது குறித்து மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் அந்த அமைப்பினர் இன்று மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு எதிர்வரும் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாநிலத்தின் வனத் துறை அதிகாரிகள் மற்றும் பெங்கால் பூங்காவின் இயக்குனரும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
‘அக்பர்’ முகலாயப் பேரரசர் என்பதாலும், வால்மீகியின் ‘இராமாயணத்தில்’ சீதை ஒரு இந்து மதக் கடவுளாகப் போற்றப்படுவதாலும் வலதுசாரி அணியினர் இந்த விடயத்தில் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
வனத்துறை சிங்கங்களுக்கு பெயர்களை வைத்துள்ளதாகவும், ‘சீதா’வை ‘அக்பருடன்’ இணைத்தது இந்துக்களுக்கு அவமரியாதையாக கருதப்படுவதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், சிங்கத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று அந்த தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.