சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 32 சதத்தினை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் படைத்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கான அதிக சதங்கள் அடித்தவர் வரிசையில் வில்லியம்சன் 32 சதத்துடன் முதலிடத்திலும், ரோஸ் டெய்லர் 19 சதத்துடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறானர்.
தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி நேற்று வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்ததுடன், தொடரையும் 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்த வரலாற்று வெற்றியுடன் தென்னாப்பிரிக்காவை 92 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி முதன்முறையாக வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் கேன் வில்லியம்சன் பல சாதனைகளை படைத்துள்ளார். இறுதி டெஸ்ட் போட்டியின் கடைசி இன்னிங்சில் அவர் ஆட்டமிழக்காது 12 நான்கு ஓட்டங்கள், இரண்டு ஆறு ஓட்டங்கள் அடங்களாக 133 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதன் மூலம் நியூசிலாந்து அணி நான்காவது அதிகூடிய ஓட்டங்களை துரத்தியடித்துள்ளது.
கடந்த வாரம் 31வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்த வில்லியம்சன் இங்கிலாந்து அணியின் ஜோய் ரூட்டின் சாதனையை சமன் செய்திருந்தார்.
தற்போது அவரின் சாதனையை முறியடித்துள்ள வில்லியமசன், 172 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், 32 டெஸ்ட் சதங்களை விரைவாக அடித்தவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
முன்னதாக 174 இன்னிங்ஸ்களில் 32 சதங்களை அடித்த அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை வில்லியம்சன் முறியடித்துள்ளார்.
இவர்களைத் தவிற, ரிக்கி பொன்டிங்க 176 இன்னிங்ஸ்களிலும், சச்சின் டெண்டுல்கர் 179 இன்னிங்ஸ்களிலும், யூனிஸ் கான் 193 இன்னிங்ஸ்களிலும், சுனில் கவாஸ்கர் 195 இன்னிங்ஸ்களிலும் தமது 32வது சதங்களை அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் வில்லியம்சனின் பெற்றுக்கொண்ட ஐந்தாவது சதம் இதுவாகும்.
இதன் மூலம் இறுதி இன்னிங்ஸில் அதிக சதங்கள் விளாசிய பாகிஸ்தான் அணியின் யூனிஸ் கானுடன் அவர் இணைந்துள்ளார்.
சமீபத்திய காலங்களில், கேன் வில்லியம்சன் தனது கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்கள் உட்பட எட்டு சதங்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.