ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வு இன்று (07) காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பமானது.
இதற்கு பங்கேற்க சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேயும் வருகை தந்திருந்தார்.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கஞ்சா தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டயானா கமகே;
“.. நான் தெரியாதவற்றை பேசுபவள் அல்ல. கஞ்சா தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் இன்று நேற்று அமைச்சரவைக்கு சமர்ப்பித்தது அல்ல. அது 2023-11-29ம் திகதியாகும். நான் தெரிவித்த அமைச்சரவை பத்திரம் என்னிடம் உண்டு. நான் ஊடகங்களுக்கு வழங்கவுள்ளேன். இது ஜனாதிபதி, திலும் அமுனுகம ஆகியோரால் முன்வைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு, என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராயுமாறும் கூறியுள்ளார். இது இன்று நேற்று நடந்தது அல்ல. இது கடந்த வருடம் அனுமதி கிடைத்தது. அனுமதி பெறப்பட்டதை கூறியது அமைச்சர் சிசிர ஜயக்கொடி நான் அல்ல. எனக்கு அழைப்பினை ஏற்படுத்தி எல்லோரும் வினவ நான் அனுமதி கிடைத்துள்ளதை கூறினேன். கஞ்சா பயிர்ச்செய்கைக்கு முன்னர் சட்டதிட்டங்கள் நடைமுறைகள் உண்டு அவற்றை ஆராயவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கஞ்சா பயிர்ச்செய்கை இலங்கைக்கு அவசியம் இல்லை என்று நினைத்தால் எப்போதும் பிச்சை எடுக்க வேண்டியது தான்..”
இந்நிலையில், இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி செய்வது தொடர்பாக அமைச்சரவையில் முன்மொழிவு எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகச் செயலாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்திருந்தார்.
அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவிக்கையில், இராஜாங்க அமைச்சர் அமைச்சரவை அமைச்சர் அல்ல எனவும் அவர் கூறியதற்கு தாம் பொறுப்பல்ல எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று பாராளுமன்ற லிப்டில் டயானா கமகே பந்துல குணவர்த்தன ஆகியோர் கட்டிப்பிடித்து சுமுகமாக சிரித்துப் பேசி, டயானா தெரிவிக்கையில், ‘சிசிர கூறியதுக்கு நான் பொறுப்புக் கூற முடியாது‘என கூறியிருந்தார்.