இலங்கை தமிரசுக் கட்சியின் பொதுச் செயலாளரை தெரிவுசெய்தற்கான வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் இடம்பெற உள்ளது.
பொதுச் செயலாளரை தெரிவுசெய்வதற்காக கட்சியின் பொது சபைக் கூட்டம் இன்று காலை முதல் இடம்பெற்றுவரும் நிலையில், திருகோணமலையை சேர்ந்த குகதாசனை அந்தப் பதவிக்கு நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.
எனினும் பொது சபையில் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக வாக்கெடுப்பின் மூலம் பொதுச் செயலாளரை தெரிவுசெய்ய தீரை்மானிக்கப்பட்டுள்ளது.
குகதாசனுக்கு அவரது சொந்த மாவட்டமான திருகோணமலை மாவட்ட கிளையிலேயே கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.
இந்நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்பு இடம்பெற உள்ளது.
341 பேரை கொண்ட பொது சபையில் இன்றைய கூட்டத்தில் 98 பேர் மாத்திரமே கலந்துகொண்டுள்ளதுடன், இந்த 98 பேர் மாத்திரமே வாக்களிக்கவும் தகுதிப்பெற்றுள்ளனர்..
தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் குழப்பம்
திருகோணமலையில் இன்று இடம்பெற்றுவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கட்சியின் தேசிய மாநாடு இன்றும் நாளையும் திருகோணமலையில் இடம்பெறுகிறது. இதில் பொதுச் செயலாளர் உட்பட கட்சியின் ஏனைய பதவிகளுக்கான தெரிவுகளும் இடம்பெறுகிறது.
திடீரென ஏற்பட்ட பதற்றம்
இன்று பிற்பகல் பொதுச் செயலாளர் பதவிக்கான தெரிவு இடம்பெற்றது. இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள், தலைவர் வடக்கில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளதால் பொதுசெயலாளர் கிழக்கில் இருந்து தெரிவுசெய்யப்பட வேண்டும் கோரிக்கைகள் முன்வைத்தனர்.
கட்சித் தலைவரும் கிழக்கில் இருந்தே பொதுச் செயலாளர் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்பதாக அறிவித்தார். இதன்படி கிழக்கில் இருந்து ஒருவரை தெரிவுசெய்து பெரும்பான்மையினரின் ஆதரவுடன் பொது செயலாளர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்பது கட்சித் தலைவரின் நிலைப்பாடாக இருந்தது.
வாக்கெடுப்பின் ஊடாக பொதுச் செயலாளரை தெரிவுசெய்வது உடன்பாடு இல்லை என இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதுடன், கட்சியின் மரபுகளுக்கு ஏற்ப அனைவரின் ஒத்துழைப்புடன் பொதுச் செயலாளர் தெரிவு இடம்பெற வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
எவ்வாறாயினும் திருகோணமலையை சேர்ந்த குகதாசனை பொதுச் செயலாளர் பதிவிக்கு பரிந்துரைக்கும் போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
குகதாசனை பொதுச் செயலாளராக நியமிக்கப்பதற்கு எதிராக ஒரு தரப்பினர் குழப்பத்தில் ஈடுபட்டதால் ஆதரவாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பதவிகளுக்கான பெயர் விபரங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
முன்மொழியப்பட்ட பெயர்கள்
மாநாட்டில் எடுக்கப்பட்டுள்ள முடிவின் பிரகாரம் பொதுச் செயலாளராக குகதாசனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
சிரேஷ்ட உப தலைவராக சி.வி.கே சிவஞானம், இணை பொருளாளர்களாக ஞா.சிறிநேசன், கனகசபாபதி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
துணைத் தலைவர்களாக கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், அரியநேந்திரன், சத்தியலிங்கம் ஆகியோரும் இணை செயலாளர்களாக சாந்தி சிறிஸ் கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன.
கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதாலேயே இருதரப்பினருக்கு இடையில் முறுகல் நிலை தோன்றியமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த 21ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் அமோக விருப்பு வாக்குகளின் அடிப்படையில் கட்சியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது..