இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருகிறது.
சுதந்திர தின கொண்டாட்டங்களை கருத்திற்கொண்டு போக்குவரத்து திட்டங்களை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி, காலி முகத்திடல் வீதி, கொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையிலான வீதி, செராமிக் சந்தியிலிருந்து காலி முகத்திடல் வரையிலாள வீதிகள் மூடப்படும்.
ஜனவரி 29 முதல் பெப்ரவரி 02 ஆம் திகதிவரை காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையும், முற்பகல் 11.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையும் வீதிகள் ஒத்திகை நடவடிக்கைக்காக மூடப்படும்.
பெப்ரவரி 03 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி தொடக்கம் பெப்ரவரி 04 ஆம் திகதி சுதந்திர தின விழா நிறைவடையும் வரை வீதிகள் இந்த வீதிகள் மீண்டும் மூடப்படும்.
சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதிகள் உரையாற்றுவது மரபாக இருந்துவந்தது. ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த ஆண்டு சுதந்திர தின உரையை தவிர்த்திருந்ததுடன், இம்முறையும் அதனை தவிர்க்க உள்ளதாக ஆளுங்கட்சி வட்டாரங்களில் அறிய முடிகிறது.
இதனால் ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் கவலையடைந்துள்ளனர். பாராளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் 7ஆம் திகதி ஆரம்பமாக உள்ள புதிய கூட்டத்தொடரில் ஜனாதிபதி தமது கொள்கைப்பிரடகன உரையை நிகழ்த்த உள்ளார்.