மலேசிய தலைநகர் கோலாலப்பூருக்கு அருகில் பெரெனாங் பண்டார் தாசிக் கேசுமா என்ற இடத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் உட்பட வெளிநாடுகளை சேர்ந்த 560 பேரை மலேசிய குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் தங்கியிருந்த இந்த வெளிநாட்டவர்களிடம் ஆவணங்கள் இருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், இந்தோனேசியா, கம்போடியா, சியாராலோன் , கெமரூன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களை கூட்டு நடவடிக்கையின் மூலம் தாம் கைது செய்ததாக மலேசிய குடிவரவு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு 11 மணியளவில் மேற்கொள்ளபட்ட இந்த நடடிக்கையின் போது 751 வெளிநாட்டினர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய குடிவரவு துறையின் பிரதான பணிப்பாளர் டத்தோ ருஸ்லின் ஜூசோ கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது சில வெளிநாட்டினர் தப்பியோட முயற்சித்த போதிலும் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் பைடூரி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கியிருந்த மக்களில் 80 வீதத்தினர் வெளிநாட்டினர் எனவும் ருஸ்லின் குறிப்பிட்டுள்ளார்.