ஈரானின் ‘வைரக் கிரீடம்’ தரைமட்டம்: கார் தீவில் அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல்
– எண்ணெய் கிணறுகளுக்கு ட்ரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை!
ஈரான் மீதான போர் நடவடிக்கையில் ஒரு திருப்புமுனையாக, அந்நாட்டின் மிக முக்கியமான பொருளாதார மையமான கார் (Kharg) தீவு மீது அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம் (CENTCOM) பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், “மத்திய கிழக்கு வரலாற்றிலேயே சக்திவாய்ந்த ஒன்று” என வெள்ளை மாளிகை வர்ணித்துள்ளது.
இராணுவ இலக்குகள் அழிப்பு:
பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள கார் தீவிலுள்ள அனைத்து ஈரானிய இராணுவ இலக்குகளும் துல்லியமாகத் தாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அதிபர் ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
“ஈரானின் பொருளாதாரப் பொக்கிஷமாகத் திகழும் கார் தீவின் இராணுவப் பலத்தை நாம் முற்றாக அழித்துவிட்டோம்” என அவர் தனது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் உள்கட்டமைப்புக்கான எச்சரிக்கை
இருப்பினும், மனிதாபிமான மற்றும் மூலோபாய காரணங்களுக்காக அத்தீவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஏற்றுமதி மையங்களை இதுவரை தாம் தாக்கவில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“ஹார்முஸ் ஜலசந்தி ஊடாகச் செல்லும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு ஈரானோ அல்லது வேறு எவரோ இடையூறு விளைவித்தால், அடுத்த நிமிஷமே எண்ணெய் கிணறுகளையும் அழிக்கும் முடிவை எடுப்பேன்” என அவர் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் ஆவேசமான பதிலடி:
இத்தாக்குதலுக்கு ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் காலிபாப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “ஈரானின் இறையாண்மைக்கு உட்பட்ட தீவுகள் மீதான தாக்குதல், போரை புதிய நிலைக்குக் கொண்டு செல்லும்.
இதன்போது அமெரிக்க வீரர்களின் இரத்தம் சிந்தினால் அதற்கு அதிபர் ட்ரம்ப் மாத்திரமே பொறுப்பேற்க வேண்டும்” என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், ஈரான் இனி எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றிப் பதிலடி கொடுக்கும் எனவும் அவர் சூளுரைத்துள்ளார்.

