இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக தான் தெரிவுசெய்யப்பட்டால் கட்சியை கட்டுக்கோப்பாகவும் அதேவேளை, கட்சி மூலமாக தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பேன் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கட்சித் தலைவரை தெரிவுசெய்வதற்கு வாக்களிப்பது சிறந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை காரியாலயத்தில் இன்றைய தினம் (12) கட்சி உறுப்பினர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கட்சியில் இணக்கப்பாடு தொடர்பில் பரிசீலனை செய்த போது சாத்தியப்படாது என்ற தீர்மானித்ததற்கு அமைய ஜனநாயக ரீதியாக வாக்களிப்பதே சிறந்தது என கலந்துரையாடப்பட்டுள்ளது. நான் கட்சியின் தலைவராக வருவேன் என யாராலும் கூற முடியாது.
எனினும், கட்சியின் தலைவராக தான் தெரிவுசெய்யப்பட்டால் கட்சியை கட்டுக்கோப்பாகவும், கட்சி மூலமாக தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் பணிகளை முன்னெடுப்பேன்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்கு ஒருவரை தெரிவுசெய்யும் நோக்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இரா.சம்பந்தனதன் தலைமையில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது இணக்கப்பாட்டுடன் தலைவர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு 24 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இதன்படி, நேற்றைய தினம் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பர்களான சுமந்திரன், சிறிதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் சந்தித்துப் பேசியிருந்தனர்.
எனினும், இந்தப் பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ஏற்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து வாக்களிப்பு மூலம் தலைவரை தெரிவுசெய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.