அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாகப் புதிதாகக் கட்டப்படவுள்ள முகம்மது பின் அப்துல்லா மசூதிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மெக்காவிலிருந்து இமாம் வருகிறார்.
அயோத்தியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலுள்ள தானிபூர் என்ற இடத்தில், அயோத்தி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இணங்க முஸ்லிம்களுக்கு உத்தரப் பிரதேச அரசு வழங்கிய இடத்தில் புதிய மசூதி கட்டப்படவுள்ளது.
இந்த மசூதி இந்தியாவிலேயே பெரியவொன்றாக அமையும் என்றும் 5 மினார்கள், இஸ்லாமிய மார்க்கத்தின் 5 தூண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைக்கப்படவுள்ளன என்றும் மும்பையைச் சேர்ந்த பாஜக தலைவரும் மசூதி மேம்பாட்டுக் குழுவின் தலைவருமான ஹாஜி அராஃபத் ஷேக் தெரிவித்துள்ளார்.
தாஜ்மஹாலைவிட மிளிரக் கூடியதாக இந்த மசூதி இருக்கும். மேலும், மசூதியுடன் புற்றுநோய் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, அருங்காட்சியகம், நூலகம் மற்றும் முழுமையான சைவ உணவகம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்
அடிக்கல் நாட்டும் விழாவின்போது, மசூதியின் வடிவமைப்பும் வெளியிடப்படவுள்ளது. எல்லாவற்றையும்விட மிகப் பெரிய கடல் உயிரினக் காட்சியகம் இங்கு அமையவுள்ளது. வழிபாட்டுக்காக மட்டுமில்லாமல் அனைத்து மதத்தையும் சேர்ந்த மக்கள் இங்கு அமைதி மற்றும் ஒருமைபாட்டைத் தேடி வரலாம் என ஷேக் தெரிவித்துள்ளார்