ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் அவசரக் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 45 தமிழக மீனவர்கள் மற்றும் 138 படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

“புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் மூன்றாவது சம்பவம் இதுவாகும்.

இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நமது மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை மீறும் வகையில் இதுபோன்று கைது நடவடிக்கையில் ஈடுபடுவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

இந்த கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்துகிறது. இந்த ஆறு மீனவர்கள் தவிர்த்து ஏற்கெனவே 39 மீனவர்களும், 137 படகுகளும் இலங்கை கடற்படையினர் பறிமதல் செய்துள்ளனர்.

எனவே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள் மற்றும் 138 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திடத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: admin