மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நவம்பர் 16ஆம் திகதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் சபரிமலையில் திரண்டதால், அவர்கள் வழிபாட்டுக்காகப் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறுகின்றனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இணையத்தில் பக்தர்களுக்கு முன்பதிவு எண்ணிக்கையை குறைத்தும் கூட்டம் அலைமோதியது.
நேற்று செவ்வாய்க்கிழமை பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தி அனுப்பப்பட்டனர். இதனால் 10 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடியே பக்தர்களின் அவதிக்கு முக்கியமான காரணமாகக் கூறப்படுகிறது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.