நீதிபதிக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் நீதிபதி வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரி போராடாதது ஏன்? ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் கேள்வி!
முல்லைத்தீவு நீதிபதி நாட்டைவிட்டு வெளியேறியதற்காக போராட்டங்கள் செய்தவர்கள் அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினார்களா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (14.11.2023) நடத்திய ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்:
மகாவலி அதிகார சபை ஏறாவூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் மயிலத்தமடு – மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறிய குடும்பங்களை வெளியேறுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில் சித்தாண்டியில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஏறாவூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவார்களா? ஏனெனில் முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரி எந்த சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியம் பேசும் சந்தர்ப்பவாத கட்சிகள் குரல் எழுப்பியது கிடையாது.
மாறாக நீதிபதி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என தேர்தலை இலக்குவைத்து நீயா நானா என்ற போட்டியில் கடையடைப்பு, இரந்து வேண்டுதல், சங்கிலிப்போராட்டம் என பல்வேறு வடிவங்களில் மக்களின் நாளாந்த இயல்பு நிலைகளை குலைக்கும் செயலிலேயே தீவிரம் காட்டி வந்தனர்.
ஆனால், முல்லைத்தீவு நீதிபதி வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு கோரவில்லை. அதேபோன்றே தற்போது மூதூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைக்கு கொண்டுவருமாறு கோருவார்களா? என எண்ணிப்பார்ப்போமானால் பிரச்சினைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதே அவர்களது விரும்பம். அவ்வாறான நிலைமை நீடித்தால் தான் தமது அரசியல் பிழைப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதே அவர்களது எண்ணமாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.