வட்டுக்கோட்டை இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு நாளும் இன்றையதினம் (10.11.2023) நடைபெற்றது.
கல்லூரியில் உள்ள சரஸ்வதி தேவியின் திருவுருவச் சிலைக்கு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. பின்னர் விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.
பின்னர் தேவாரம் பாடப்பட்டதைத் தொடர்ந்து தேசியக் கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைக்க, பாடசாலைக் கொடியினை கல்லூரியின் முதல்வர் ஏற்றினார்.
பின்னர் விருந்தினர்கள் மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க அரங்கத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. பின்னர் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றதுடன், மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இறுதியாக பரிசளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
கல்லூரியின் முதல்வர் லங்கா பிரதீபன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வலிகாமம் கல்வி வலயத்தின் பணிப்பாளர் திரு.க.ஜெ.பிரெட்லி பிரதம விருந்தினராகவும், தேசிய பாடசாலை கிளை மத்திய அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு.க.மணிமார்பன் சிறப்பு விருந்தினராகவும், கொழும்பு கல்வி வலயத்தின் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் திருமதி. கௌரி இரத்தினவேல் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்ததுடன், ஆசிரியர்கள், மாணவர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.