பல்கலை. மாணவர்கள் வரலாறுகளை மீள் பரிசீலிப்பது சிறந்தது – ஈ.பி.டி.பி.

கருத்து சுதந்திரம் துப்பாக்கி முனைக்கு துதிபாடியதால் கல்விப் புலம் பாரிய பின்னடைவை சந்தித்தது – பல்கலை மாணவர்கள் வரலாறுகளை மீள் பரிசீலிப்பது சிறந்தது – ஈ.பி.டி.பியின் ஊடகப் பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் வலியுறுத்து!

கடந்த காலங்களில் பேச்சு சுதந்திரம் எழுத்து சதந்திரம் கருத்து சுதந்திரம் எல்லாம் துப்பாக்கி முனைகளுக்கு துதிபாடியதால் எமது கல்விப் புலம் பாரிய பின்னடைவுகளை சந்தித்தது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், இதனை மாணவர் சமூகம் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (10.11.2023) ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில்,
பல்கலைக்கழக வரலாற்றை பார்க்கின்றபோது அன்று பல்கலைக்கழகம் வேண்டாம் வளாகம் மட்டுமே போதும் என்று போர்க்கொடி தூக்கியவர்களை கண்டுகொள்ளாத அன்றைய அரசு தமிழ் மாணவர்களின் நலன்கருதி பல்கலைக்கழகத்தை யாழ்ப்பாணத்தில் நிறுவியது.

அதன்பின்னர் இன்று யாழ்ப்பாணத்துடன் கிளிநொச்சி வவுனியா என பல்கலைக்கழகம் பரிணாமம் பெற்றிருக்கின்றது. அன்று அதனை எதிர்த்தவர்கள் இந்த போலி தேசியம் பேசும் குழுவினர் தான். இதனை மாணவர் சமூகம் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

அத்துடன் முற்போக்கு சிந்தனையுடன் போராடிய யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் கடத்தப்பட்டதும் அதற்கு நியாயம் கேட்டு போராடிய விமலேஸ்வரன் பின்னர் காணாமல் போனதும் ஈழ விடுதலை போராட்டத்தில் மாணவர் சமூகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றது.

ஆனால் இன்று அழிவு யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னர் கருத்து சுதந்திரம் பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் என்ற அனைத்தும் இருக்கின்ற நிலையில் மீண்டும் அதை மறுதலிக்கின்ற சூழல் உருவாகிவருகின்றதா என்ற அச்சம் காணப்படுகின்றது.

 

இதனை மாணவர் சமூகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000

Recommended For You

About the Author: S.R.KARAN