மீண்டும் இன முரண்பாடுகள்!

முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆலயத்தை சொந்தம் கொண்டாடுவதில் இன முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்றையதினம் 21.06.2023 சிங்கள பௌத்தர்கள் குருந்தூர்மலை ஆலயத்திற்கு வருகை தந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இதன் காரணமாக ஒரு நெருக்கடி நிலை – மோதல் சூழல் உருவாகக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கின்றது என தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா எச்சரித்துள்ளார்.

யாழ். மாவட்ட சர்வமத செயற்குழுவானது மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் யாழில் நேற்று அமைதி ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தது.

அபிவிருத்திக்கான சமூக அமைப்புக்களின் வலையமைப்பின் (SOND) ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை(20-06-2023) காலை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் ஆரம்பித்து வைத்தியசாலை முன் வீதியூடாக ஊர்வலம் நூலகத்தை மீண்டும் வந்தடைந்தது.

இதன் பின்னர் யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது ஜெகான் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்திலே நடைபெற்ற ஒரு சிறந்த செயற்பாடு ஒன்றை இங்கே நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத்தினர் நிலை கொண்டிருந்த காணியில் தமது வழிபாட்டுக்காக வைத்திருந்த புத்தர் சிலையை இராணுவத்தினர் அந்த இடத்திலிருந்து வெளியேறியபோது எடுத்து செல்லவில்லை.

இந்துக்கள் – தமிழ் மக்கள் செறிந்து வாழக்கூடிய பிரதேசத்தில் புத்தர் சிலை இருந்தது ஒரு நடைமுறை சிக்கலாக காணப்பட்டது.

எனவே, அந்தக் காலப்பகுதியில் மத நல்லிணக்க குழுவானது யாழ். மாவட்ட படை (இராணுவ) தளபதியுடன் பேசி அந்த புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.

இத்தகைய சூழ்நிலையில் மிகவும் பழமை வாய்ந்த (முல்லைத்தீவு குருந்தூர்மலை) ஆலயத்தை சொந்தம் கொண்டாடுவதில் இன முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் (21.06.2023) சிங்கள பௌத்தர்கள் குருந்தூர்மலை ஆலயத்திற்கு வருகை தந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இதன் காரணமாக ஒரு நெருக்கடி நிலை – மோதல் சூழல் உருவாகக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.

ஆகவே, அரசாங்கமானது சட்டப்படி
எல்லோரையும் சமமாக மதித்து பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்து மோதல் சூழல் ஏற்படாத வகையில் செயற்பட வேண்டும் என்பது எமது விருப்பமாக இருக்கின்றது.

இலங்கையில் எல்லா மதங்களையும் எல்லா இனங்களையும் எல்லோரும் மதிக்கக் கூடிய ஒரு சூழல் உருவாக வேண்டும்.

எல்லா இன மத மக்களும் தாங்கள் சுதந்திரமாக தமது மத அனுஷ்டானங்களை – வழிபாடுகளை செய்யக்கூடிய உரிமை இருக்க வேண்டும்.

இதன் அடிப்படையிலேயே அரசாங்கத்திடம் நாம் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஒரு ஆணைக்குழுவை அமைத்து அந்த ஆணைக்குழுவானது மத சுதந்திரத்தை நிலை நாட்டுவதற்கு செயற்பட வேண்டும் என்பதை இந்த இடத்தில் வலியுறுத்த விரும்புகின்றேன்.

நாங்கள் தான் இந்த மண்ணின் ஆதிக் குடிகள், இந்த மண்ணின் மைந்தர்கள் அல்லது நாங்கள் தான் எண்ணிக்கையில் அதிகமானவர்கள் என்று கூறி, நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனமும் போட்டி போட்டுக் கொண்டு நமக்குள் அடிபடுகின்றோம்.

இதுதான் இலங்கையில் இப்பொழுது இருக்கின்ற பாரிய பிரச்சினை. எனவே, இப்படியான உரிமைப் கோரல்களை நிறுத்திவிட்டு எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும்.

அதுதான் இலங்கைக்கு பொருத்தமானது – இலங்கைக்கு தேவையானது. நாடு எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டுமென்றால் நாம் எல்லோரும் ஒரே குடும்ப உறுப்பினர்களாக ஒற்றுமைப்பட வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகளும் அது ஆளுங்கட்சியாக இருக்கலாம் எதிர்க்கட்சியாக இருக்கலாம் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு தேசிய கொள்கையை வகுப்பதற்கு இணைய வேண்டும்.

ஊழலற்ற சூழ்நிலையை உருவாக்க அதிகார துஷ்பிரயோகம் அற்ற நிலைமையை உருவாக்குவதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் எல்லா மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது தான் தற்போது அவசியம்.
இதுதான் காலத்தின் தேவையாக உள்ளது. எப்பொழுதும் அரசாங்கமானது நடுவுநிலையாக இருக்க வேண்டும்- என்றார்.

கேள்வி :- தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டது தொடர்பில் தென்னிலங்கை நடுவு நிலையாளர்களிடமிருந்து எந்த விதமான கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லையே?

பதில் :- தையிட்டி விகாரை தொடர்பில் எந்தவித கருத்துக்களும் வெளியாகவில்லை என்று கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு காணி எடுத்துக் கொள்ளப்பட்ட முறை தொடர்பில் ஜனாதிபதியே கருத்து தெரிவித்திருக்கின்றார். அதாவது குறித்த விகாரைக்கு முறைப்படி காணி எடுத்திருக்க வேண்டும்.

அதற்கு உரிய அனுமதி எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை. ஒரு சமூகத்துக்கு எதிராக இன்னொரு சமூகம் நெருக்கடியை கொடுப்பதையோ அல்லது நியாயமற்ற முறையில் நடப்பதையோ நாம் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.

தையிட்டி விகாரை தொடர்பில் தென்னிலங்கை மக்கள் அல்லது சிவில் செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவிக்கவில்லை அல்லது எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இத்தகைய செயற்பாடுகளை தென் இலங்கையில் உள்ளவர்கள் அறிந்திருக்கிறார்கள்.

கேள்வி :- பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், புதிய ஊடக சட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்து?

பதில் :- மனித உரிமைகளை மீறக்கூடிய வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இது மிகவும் ஆபத்தானது, அபாயகரமானது. மனித உரிமைகளுக்கு எதிரானது. இதிலே ஊடகங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை விதிக்கும் நோக்கில் கொண்டுவரப்படவுள்ள சட்டமானது எமது கருத்து சுதந்திரத்தை மறுக்கின்றது – பறிக்கின்றது.

குறிப்பாக அரசாங்கத்தினுடைய சரி பிழைகளை விமர்சிப்பதை மட்டுப்படுத்துகின்றது. நாட்டிலே ஒரு ஊழல் நடந்தால் நாங்கள் அதற்கு எதிராக பேச முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

அதிகார துஷ்பிரயோகம் நடந்தால் அது தொடர்பில் ஊடகங்கள் பேச முடியாத சூழல். ஏனென்றால் ஒவ்வொரு வருடமும் ஊடகங்கள் அனுமதியைப் புதுப்பிக்க வேண்டியுள்ளதால் அனுமதியைக் கொடுக்காது ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கு அல்லது ஊடகங்களைத் தடை செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்கின்றது.

இது சிவில் சமூகத்துக்கு எதிரானதாக உள்ளது. மனித உரிமைகளை – கருத்துக்களை நசுக்கும் வகையிலேயே இந்த சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமானது பயங்கரவாத தடைச் சட்டத்தை விட மோசமானது. குறிப்பாக விசாரணை இன்றி – நீதிமன்றத்தில் ஒருவரை ஆஜர்படுத்தாமல் அவரைத் தடுத்து வைத்து விசாரிக்கக் கூடிய வகையில் குறித்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகளை மதிக்காத சட்டங்கள் தற்போது நகல்வடிவை பெற்றிருக்கின்றன. இவை மிகவும் ஆபத்தான சூழலாகும் என்றார் ஜெகான் பெரேரா.

Recommended For You

About the Author: S.R.KARAN