யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச யோகா நாள் நிகழ்வு இன்று காலை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
யோகமும் வாழ்வும்
சர்வதேச யோகா தினம் – ஜுன் 21
ஆக்கம் : ஸ்ரீ. நதிபரன் (யோகா போதனாசிரியர் )
ஒரு கலை வடிவம் இற்றைக்கு பல்லாயிரம் வருடங்கள் கடந்தும் வாழ்ந்து வருகின்றதெனில் அதனுள் அமிழ்ந்திருக்கக்கூடிய அழியாப் பெருமைகள், தத்துவப்பொருண்மைகள் மக்கள் மத்தியில் ஆழமாக வேருன்றியிருக்க வேண்டும்.
இல்லாவிடில் காலவோட்டத்தில் அதன் இருப்பானது அடித்துச்செல்லப்பட்டிருக்கும். 64 கலைகளுள் ஒன்றாக திகழும் யோகக்கலையின் நுண்மைகள் குறித்து சிலாகிக்கையில் பல்லரிய சிறப்புகள் பொதிந்துள்ளமையை அறிந்துகொள்ள முடியும். மனித வாழ்வினை வரன்முறைக்குட்படுத்தி செழுமையுற, பயனுற வாழும் வழிமுறைகள் பற்றி வகுத்துரைக்கும் இக்கலை பற்றிய பிரக்ஞைபூர்வமான புரிதல்கள் காலவோட்டத்தில் அதிகரித்து வருகின்றமை கண்கூடு. உலக நாடுகளைப் பொறுத்தவரையில் யோகத்திலுள்ள நோய் குணமாக்கும் தன்மையை ஆய்ந்துணர்துகொண்டமையால்தான் அதன் மகத்துவம் பரந்து கிளைவிட்டு வருகின்றது.
மக்களின் இயற்கைக்கு முரணான தற்போதைய வாழ்வியல் மாற்றத்தின் அகர்சிப்பினால் நோய்கள் மற்றும் பிணிநிலைகளின் பீடிப்புக்களால் அல்லலுற்று வரும் நிலையில் பக்கவிளைவுகள் இல்லாத, செலவில்லா மருத்துவமுறையாக யோகத்தினை கைக்கொள்ளத் தலைப்படுகின்றனர். காலாதிகாலம் நவீன மருத்துவ விஞ்ஞானமுறைகள் எவ்வளவுதான் முன்னேற்றமடைந்து வந்தாலும் மேற்கிளம்புகின்ற நோய்த்தாக்கங்களிற்கு அவை ஈடுகொடுக்க அல்லது கட்டுப்படுத்த முடியாமல் தோல்வி கண்டு வருகின்றமையும் கண்கூடு.
இந்நிலையில் இயற்கையோடிணைந்த வாழ்வியல் வழிமுறையாகவும் ஆன்ம ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் சித்தர்கள், மாகான்களால் ஆராதித்து போசிக்கப்பட்ட யோகக்கலையானது வாழ்வியலின் செழுமைநிலையினை எய்துவதற்காக உலக மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
இங்கு ஆரோக்கியம் என்ற எண்ணக்கருவானது உடல், உள, சமூகம், ஆன்மிகம், சூழல் போன்ற விடயங்களில் நன்னிலை அடைவதனை நோக்காக கொண்டிருந்தாலும் பொதுவாக உடல் மற்றும் உள ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதனை மையப்படுத்தியே அதிகம் பேசப்படுகின்றன. இயற்கைக்கு முரணான நமது வாழ்வியல் முறையினால் நோய்களின் பெருக்கங்களும் அதற்கான மருந்துவகைகளின் உற்பத்தி – நுகர்வின் வேகமும் அதிகரித்துவருகின்றன. பொதுப்புத்தியில் நோக்கின் தற்போதைய மருந்துகளில் இருவிடயங்களை நம்மால் அவதானிக்க முடியும்.
மக்கள் இறக்காமலும் இருக்க வேண்டும் அத்துடன் சுகதேகிகளாக இருக்கவும் கூடாது. ஒருவருக்கு உடலில் எங்கோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது என வைத்துக்கொள்வோம். நோய்க்கு தீர்வு நாடி வைத்தியசாலை சென்றால் எல்லா மருத்துவ பரிசோதனைகளையும் முடிந்தவுடன் நோய்க்கான அறிகுறிகள் ஏதும் தென்படின் அதற்குரிய மருந்துவகைகளை வைத்தியர் பரிந்துரைப்பார். குறித்தவொரு பிணிக்கு மருந்து வகைகளை உட்கொள்ள ஆரம்பித்தால் இறக்கும் வரையிலும் தொடர்ச்சியாக பாவித்துக்கொண்டிருக்கும் துரதிஸ்டமான நிலைமைகளை பார்க்கிறோம்.
இதனை அடிப்படையாக வைத்தே மருந்துகளை உற்பத்தி செய்யும் பல்தேசிய நிறுவனங்களும் செயற்பட்டு வருகின்றன. ஒருவர் ஆரோக்கியமாக இல்லாதுவிடின் அதாவது நோய்வாய்ப்படுகையில் மருந்துப்பொருட்களின் நுகர்வு வீதம் ஏறுமுகமாகும் அதேவேளை அவர் இறக்காமல் நோய்களுடன் வாழ்க்கையை நீண்டகாலம் கழிப்பாராகில் அவற்றின் தொடர் பாவனைகளால் ஒளடத உற்பத்தி நிறுவனங்களிற்கு அதிக வருமானங்கள் ஈட்டுவதையும் நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.
எனவே பக்கவிளைவுகளற்றதும் செலவற்றதும் பாதுகாப்பானதுமாகிய முன்னோர்கள் நமக்களித்துச் சென்ற அரும்பெரும் பொக்கிசமான யோக நெறிமுறைகளை நம் வாழ்க்;கையில் சரிவர கடைப்பிடித்தால் நீண்ட ஆயுளுடன் சந்தோசமாக வாழமுடியும் என்பதை சித்தர்களின் அனுபவ ரீதியாக நிறுவியிருக்கின்றனர்.
தற்கால மக்களது வாழ்வியல்; கணிசமான மாற்றங்களை சந்தித்து வருகி;ன்றது. இயற்கைக்கு முரணிலையாக வாழ்வியல் செல்நெறி கட்டமைகின்றமையால் வழமைக்கு மாறாக பல்வேறு நோய், பிணித் தாக்கங்களின் கோரப்பிடிக்குள் சிக்குவதற்கும் வழிசமைக்கின்றன.
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற நிலை மாறி தற்போது வைத்திய சாலையில்லா இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்றெண்ணும் வகையில் முன்னரைக்காட்டிலும் வீதிக்கு வீதி தனியார் வைத்தியசாலைகளின் பெருக்கமும் யாழ்.குடாவினை ஆக்கிரமித்து வருகின்றமை நோயாளிகளின் எண்ணிக்கையிலேற்படும் அதிகரிப்பையே சுட்டுகின்றது. நீங்கள் ஒருதடவை மருத்துவ பரிசோதனைக்கென தனியார் வைத்திய சாலையொன்றிற்கு செல்லும் போது வைத்திய சேவை எங்ஙனம் வியாபார மாயைக்குள் அமிழ்ந்து வருகின்றது என்பது புலனாகும். ஒரு நாட்டில் வைத்தியசலைகள், சிறைச்சாலைகள் என்பவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதெனில் அந்நாட்டின் அபிவிருத்தியானது பின்னோக்கியே செல்லும் என்பது வெளிப்படை.
எனவேதான் மேலைத்தேய கலாசாரங்களில் ஈர்ப்புக்கொள்ளாது செலவில்லாத இயற்கையோடிணைந்த யோக நெறிமுறையினை பின்பற்றும் விருப்பு எல்லோர் மனங்களிலும் துளிர்விட வேண்டும். அத்துடன் இன்றைய சமூகம் தடம் மாறிச்செல்வததால் எதிர்கால இளம் சந்ததி இருண்ட உலகத்தினை நோக்கியே பயணப்படுகின்றது. தற்காலத்தில் இதனை தடுத்து நிறுத்தவல்ல பிரம்மாஸ்திரமாக யோகக்கலை திகழ்கின்றதெனில் மாற்றுக்கருத்தில்லை.
சமகாலத்தில் யோகக்கலை மீதான மக்களின் நாட்டங்கள்- ஈடுபாடுகள் தன்னெழுச்சியாக அதிகரித்துவரும் நிலையில் அதிகளவு வேற்றின மக்கள்கூட இன மத பேதம் கடந்து இதனை பயில்வதற்கு அதிக ஆர்வம்காட்டி வருவதனையும் இதன்மூலம் உலக நாடுகள் பலவற்றில் கல்விக்கூடங்களிலும் யோகம் ஒரு பாடமாக உள்ளடக்கப்பட்டு போதிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. நமது பிரதேசத்தினை பொறுத்தவரை புற்றீசல்கள் போல யோகப்பயிற்சி மையங்கள் உருவாகி வருகின்றமையும் பல பாடசாலைகளில் யோகாசனப் பயிற்சிகள் குறிப்பாக அதன் முக்கிய பிரிவாக அமைகின்ற சூரிய நமஸ்காரம் எனும் பயிற்சிமுறையானது மாணவர்களால் பின்பற்றப்பட்டு வருவதனையும் நாட்டிலுள்ள ஒரு சில பல்கலைக்கழகங்களில் கூட யோகக்கலை பயிற்றப்பட்டு வருகின்றமையும் நோக்கத்தக்கது.
அத்துடன் தற்காலத்தில் சர்வதேச ரீதியாக பல்வேறு கல்விச்சாலைகளில் போதிக்கப்பட்டு வருகின்றமையும் உலகில் ஏராளமானோர் இக்கலையின்கண் இருக்கக்கூடிய பல்வேறு நன்மைகள் குறிப்பாக நோய் குணமாக்கல் திறன் அதிகமிருப்பதனால் இதன்பால் ஈர்க்கப்பட்டு கூடுதலானோர் இன, மத பேதம் கடந்து பயின்று பயன்பெற்று வருகின்றமையின் காரணமாகவோ என்னவோ அதன் மீது மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை மென்மேலும் அதிகரிப்பதற்காக பன்னாட்டு அரசியலின் உயர் பீடமாக விளங்குகின்ற ஐ.நா சபைகூட சர்வதேச ரீதியாக கொண்டாடி கௌரவம் செய்யவேண்டிய தினங்களுள் யோகக்கலையினையும் உள்ளடக்கியிருப்பதானது அதன் தாற்பரியத்தை- மேன்மையினை முரசறைந்து நிற்கின்றது.
அதுமட்டுமல்லாமல் எமது நல்வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அடிப்படை அம்சங்களையும் இது தன்னகத்தே கொண்டுள்ளமையால் இளையோர்களிடத்தில் இக்கலையினை கொண்டுசெல்கையில் திசைமாறிச் சென்று கொண்டிருக்கும் இன்றைய இளந்தலைமுறையினரின் வாழ்வியலில் கலங்கரைவிளக்கமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.