தகுதியுள்ள எங்களை ஏன் புறக்கணிக்கின்றீர்கள்? கேள்வியெழுப்பும் கட்புலனற்ற பட்டதாரிகள்

சத்யா நிர்மாணி

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சினை நீண்டகாலமாக பேசப்படுகின்ற விவாதத்திற்குரிய விடயமாக உள்ளது. நாட்டின் பல்கலைக்கழக பாடநெறிகள் நாட்டின் வேலைவாய்ப்பு சந்தைக்கு பொருந்தாமை, தொழில் தொடர்பில் பட்டதாரிகள் கொண்டிருக்கும் சிந்தனைகள் ஆகிய விடயங்கள் மீண்டும் மீண்டும் பேசப்படும் விடயங்களாக உள்ளன.

எவ்வாறாயினும், அண்மைக்காலம் வரை நாட்டின் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் பட்டதாரிகளில் பெரும்பான்மையானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த துறையாக அரச துறை விளங்கிய போதிலும், கொவிட் பெருந்தொற்றின் பாதிப்பினாலும், அதன் பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை காரணமாகவும் ஒட்டுமொத்தமாக தொழிற்சந்தை குறுகிப்போனதுடன் கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில் அரச சேவைக்கென பட்டதாரிகள் உள்வாங்கப்படாமை பட்டதாரிகளின் மத்தியில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தீவிரமடைய காரணமாக அமைந்திருந்தது. கட்புலனற்ற பட்டதாரிகளே இதனால் அதிகம் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களாக உள்ளனர்.

இலங்கையில் பல்கலைக்கழகங்களில் கட்புலனற்றவர்கள் கல்வி கற்பதற்கான வசதி கலைப் பிரிவுக்குட்பட்ட பட்டப்படிப்புகளுக்கு மட்டுமே உள்ளது. இந்த நிலைமையானது அத்தரப்பினரின் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையில் அதிகம் தாக்கம் செலுத்தும் மிக முக்கியமான காரணியாக உள்ளது.

அதேபோன்று மாற்றுத்திறனாளிகள் பற்றிய முற்போக்கான சிந்தனைகள் கொண்ட தனியார் துறை இல்லாமையினால் அரச நியமனங்களில் முற்றுமுழுதாக தங்கியிருக்க வேண்டிய நிலை பட்டதாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கட்புலனற்ற பட்டதாரிகளின் தற்போதைய நிலை என்ன?

ஆய்வின் பின்னணி

கடந்த 4 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறிய கட்புலனற்ற மாணவர்களின் எண்ணிக்கை சராசரியாக 75 ஆக உள்ளதுடன், இவர்களில் 30 மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர, களனி, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பேராதெனிய ஆகிய பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள். அனைவரும் கலைப் பட்டதாரிகளாவர்.

இதில் 16 பேர் பெண்களாவர். இவர்களில் முழுமையான கட்புலனற்ற நிலைக்குள்ளானவர்கள் 10 பேர்களாவர். நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் இங்கு உள்ளடக்கப்பட்டனர்.

இவர்களில் 20 பேர் சாதாரண நிலை பட்டத்தையும், 10 பேர் விசேட பட்டத்தையும் பெற்றுள்ளனர். அவர்கள் தெரிவு செய்திருந்த பாடவிதானங்களாக அரசியல் விஞ்ஞானம், சமூக விஞ்ஞர்னம், சிங்களம மொழி, பௌத்த நாகரீகம் மற்றும் பௌத்த மத ஆய்வு என்பன காணப்படுகின்றன.

பல்கலைக்கழக பட்டப்படிப்பை விட மேலதிகமாக பல பாடநெறிகளைப் பூர்த்தி செய்துள்ள இவர்களில் பெருமளவானவர்கள் தமது அறிவையும், ஆற்றலையும் மேம்படுத்திக் கொண்டுள்ளனர். ஆய்வில் கலந்துகொண்டவர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் கணிணி மற்றும் ஆங்கிலப் பாடநெறியையும், 11 பேர் மனித வள முகாமைத்துவம் பற்றிய பாடநெறியையும் 6 பேர் முகாமைத்துவம் பற்றிய பாடநெறியையும் பூர்த்தி செய்துள்ளதுடன் மேலும் 6 பேர் ஊடகம் பற்றிய பாடநெறியைப் பூர்த்தி செய்துள்ளனர்.

தொடர்ந்தும் கல்வியைத் தொடரும் எதிர்பார்ப்பு குறித்து வினவியப் பொழுது இவர்களில் 80 சதவீதமானவர்கள் பட்டப்பின்படிப்பை மேற்கொள்வதற்கு விரும்புவதாகக் கூறியிருந்தனர். நிலவும் பொருளாதார நெருக்கடி பலருக்கு கல்வியைத் தொடர்வதற்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளதுடன், இதுவரையும் கஷ்டப்பட்டு கற்ற கல்விக்கு உரிய பலன் கிட்டாமையும் அவர்களின் மத்தியில் அதிருப்தி நிலையை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பின்றி 73 சதவீதமானவர்கள்

எமது ஆய்வில் பங்குபற்றிய 30 பேரில், 12 பேர் மட்டுமே தொழில்வாய்ப்பை பெற்றிருந்தனர். 18 பேர் எந்தவிதமான தொழில் வாய்ப்பையும் பெறவில்லை. இது 60 சதவீதமாகும். 8 பேர் பணியில் இணைந்துள்ளனர்.

தொழில் ஸ்திரத்தன்மை பற்றி நோக்கும் போது, அவர்கள் எவரும் நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. அவர்களுக்கு கிடைக்கும் ஆகக் கூடிய வருமானம் ரூ 30 ஆயிரம் மட்டுமே. அந்த வருமானத்தைப் பெறும் பட்டதாரிகள் இருவர் மட்டுமே உள்ளனர். மற்றைய 6 பேரும் இதனை விட குறைவான ஊதியத்தில் பணியாற்றுகின்றனர்.

முன்பு பணியில் ஈடுபட்டு பின்னர் தொழிலை இழந்திருக்கும் 4 பேரில் மூவர், சம்பளம் போதாமை, போக்குவரத்து அசௌகரியங்கள், கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலையின்மை ஆகிய காரணங்களினால் பணியைக் கைவிட்டுள்ளதுடன் ஒருவர் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்டம் பூர்த்தியடைந்ததன் காரணமாக வேலைவாய்ப்பின்றி இருக்கின்றார்.

பணியில் இணைந்துள்ள 8 பேர் அரச சார்பற்ற அமைப்புகள் அல்லது தனியார் தொழிற்துறைகளில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலர் சுயமாக தொழில் ஒன்றை ஆரம்பித்து நடத்துதல், தனியார் வகுப்பு நடத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர்.

அரச சார்பற்ற நிறுவனங்களில் இணைந்து பணியாற்றுபவர்களில் பெருமளவானவர்கள் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிய தமிழ் பட்டதாரிகளாவர்.

அப்பகுதிகளைச் சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனங்கள் அவர்களுக்கு மகத்தான ஒத்துழைப்பை வழங்கி வருவதுடன் அவர்களுக்கு பயிற்சிக்கான வாய்ப்புகளும் அளிக்கப்படுகின்றன.

வேலையின்மை காரணமாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்துகொள்வதற்காக அவர்களிடம் வினாத்தொகுதி ஒன்று கையளிக்கப்பட்டதுடன், அவற்றில் பதிவான பதில்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது வேலைவாய்ப்பின்றி இருக்கும் அனைவரும் கடும் விரக்தியை எதிர்கொள்வதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

கட்புலனற்ற ஒருவர் பட்டப்படிப்பை நிறைவு செய்யும் வரை கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளதுடன், நல்லதொரு எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்பு இந்த துன்பங்களைக் கடப்பதற்கு உந்துசக்தியாக உள்ளன. எனினும் பட்டப்படிப்பை நிறைவு செய்த பின்பு அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமை அவர்களை மிகவும் மன உளைச்சலுக்குட்படுத்துகின்றது. விவாகம் உட்பட பல எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் இவ்விடயம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சலுகைகள் அல்லது கொடுப்பனவுகள் இந்த பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாக அமையாது. விசேட தேவையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கென அரசு பொதுவாக வழங்கும் விசேட கொடுப்பனவு இவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

ஆனாலும், நாம் மேற்கொண்ட ஆய்வில் விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவு இந்த 30 பேரில் 6 பேருக்கு மட்டுமே கிடைக்கின்றது என்பது தெரிய வருகின்றது. இதன்படி 24 பேருக்கு அதாவது ஆய்வில் கலந்துகொண்ட ஒட்டுமொத்த நபர்களில் 70 சதவீதமானவர்களுக்கு இந்த விசேட கொடுப்பனவு வழங்கப்படாதது ஏன் என்பது பற்றிய காரணங்களைக் கண்டறிவது அவசியமாகும்.

பட்டப்படிப்பும் தொழிற்சந்தையும்

இந்த ஆய்வில் தெரியவந்த மற்றுமொரு விடயம் பெரும்பாலானவர்கள் நிறைவு செய்துள்ள பட்டப்படிப்புகள் தற்போதைய தொழிற்சந்தைக்கு பொருந்தாமல் உள்ளது. பெரும்பாலானவர்கள் வரலாறு, பௌத்த நாகரீகம், பௌத்த மெய்யியல், சிங்களம் போன்ற பாடங்களைக் கற்றிருந்தனர்.

இப்பாடங்கள் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதில் எந்தளவுக்கு உதவியாக உள்ளன என்பது பிரச்சினைக்குரியதாகும். குறிப்பாக கணிணி விஞ்ஞானம் போன்ற பாடங்கள் தற்கால தேவை கருதி மிகவும் அதிக முக்கியத்துவம் கொண்டதாக அமைகின்ற போதிலும் பட்டப்படிப்பாக அவற்றைக் கற்பதற்கு இலங்கையில் கட்புலனற்ற மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டாத நிலையே காணப்படுகின்றது.

பெரும்பாலானவர்கள் வெளிவாரி கற்கைகளினூடாக இவ்வாறான பாடங்களைக் கற்றிருந்தாலும் தொழிற்சந்தையில் கால்பதிப்பதற்கு இது போதுமானதல்ல. இந்த நிலைமையானது எதிர்காலத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது.

கட்புலனற்ற பட்டதாரிகள் உட்பட பல்கலைக்கழத்திலிருந்து பட்டம் பெற்று வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் பிரச்சினையைப் பற்றி பல்கலைக்கழகங்களின் அக்கறையும் தலையீடும் எவ்வாறுள்ளது? இவ்விடயம் பற்றி தேடிப்பார்த்த போது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மட்டுமே இந்த சவாலை எதிர்கொள்ள ஓர் திட்டத்தை வகுத்துள்ளது.

மூன்று மாதங்களுக்கு முன்பு அவர்கள் ஜயிக்கா (JICA) ) நிறுவனத்துடன் இணைந்து பல்கலைக்கழத்திலிருந்து வெளியேறிய விசேட தேவையுடைய பட்டதாரி மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் திட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தனர். இதன் கீழ் பேச்சு குறைபாடுள்ள பட்டதாரிகள் இருவருக்கு தொழில் வாய்ப்பு வழங்க முடிந்ததாக மானுடவியல் சமூக விஞ்ஞானத்துறையின் தலைவர் பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்தே குறிப்பிட்டார்.

கட்புலனற்ற பட்டதாரிகள் முன்வைக்கும் தீர்வுகள்

இந்த பிரச்சினைக்கு தீர்வாக கட்புலனற்ற பட்டதாரிகள் மத்தியிலிருந்து பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்பாட்டில் இந்த யோசனைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களினூடாக தொழில் சந்தைக்கு ஏற்றவாறான பாடநெறிகளை உருவாக்க வேண்டும் என்பதுடன், கலைப் பாடநெறிகளை குறிப்பிட்ட பாடங்களுக்குள் மட்டும் வரையறுக்காமல் மற்றைய பாடவிதானங்களுக்குரிய பட்டப்படிப்புகளையும் தொடர கட்புலனற்ற மாணவர்களுக்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது முதன்மையான யோசனையாக உள்ளது. அதேபோன்று கட்புலனற்ற பட்டதாரிகளுக்கு அரச பணிகளை வழங்குதல் தொடர்பாக ஒரு நிலையான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும். அவர்களால் வெற்றிகரமாக ஈடுபடக் கூடிய தொழிற்துறைகளை இனங்கண்டு, அத்துறைகளில் உள்ள வெற்றிடங்களுக்கு அவர்களை நியமிப்பதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும். உதாரணமாக கட்புலனற்ற பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகளில் ஆசிரியர்களாகவும், பல்கலைக்கழகங்களில் கட்புலனற்ற மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கான ஆலோசகர்களாக கட்புலனற்ற பட்டதாரிகளின் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று அரச பணிகளை வழங்கும் திட்டங்களில் விசேட தேவையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத ஒதுக்கீடு ஒன்றை வழங்க வேண்டும் என்று உறுதி கூறும் சுற்றுநிரூபத்தை அமுல்படுத்த வேண்டும்.
அரச மற்றும் தனியார் பிரிவுகள், அரச சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து அவர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தரும் ஒரு நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது மற்றுமொரு யோசனையாகும். தொழில் வழங்கும் போது பயிற்சி அவசியம் என்பதால் அதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படல் வேண்டும். அதேபோன்று கட்புலனற்ற பட்டதாரிகள் தொழிற்பயிற்சிகளைப் பெறவும் தயாராக வேண்டும்.
தொலைபேசி உதவியாளர்கள், ஆய்வாளர்கள், கணிணி இயக்குநர்கள் போன்ற பல தொழில்களில் கட்புலனற்ற நபர்கள் மிகவும் வெற்றிகரமாக ஈடுபட முடியும். அத்துடன் தனியார் துறையில் பொருத்தமான தொழில்களுக்காக அவர்களை ஈடுபடுத்தும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். தனியார் துறையில் சிந்தனை மாற்றங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளையும் சமகாலத்தில் ஒரே நேரத்தில் முன்னெடுக்க வேண்டும். குறிப்பாக அரச மற்றும் தனியார் துறையில் நிறுவன தலைவர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கு கட்புலனற்றவர்களின் ஆற்றல்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்ற பணிச் சூழலை உருவாக்குதல் தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்தல் வேண்டும். குறிப்பாக விசேட தேவையுள்ளவர்கள் பற்றிய முன்னேற்றகரமான சிந்தனைகள் மற்றும் அவர்களுக்கான ஒத்துழைப்பானது நிறுவனங்களின் புகழை உயர்த்தும் விடயமாக உள்ளது. தற்போதும் ஒரு சில தனியார் நிறுவனங்கள் அவ்வாறான கொள்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன. சமிக்ஞை மொழியில் செயற்படும் (பேச்சு குறைபாடு உள்ள) பணியாளர்களை ஈடுபடுத்தி இயக்கப்படும் திம்பிரிகஸ்யாய பீட்சா உணவு விடுதி இதற்கு சிறந்த உதாரணமாகும். இவ்வாறான முயற்சிகள் ஊக்குவிக்கப்படல் வேண்டும். இதனை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் சிறந்த முறையில் முன்னெடுக்க முடியும்.
சொந்;தத் தொழில் செய்பவர்களுக்கான கடன் அல்லது உதவிகள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் பலரின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறான வேலைத்திட்டம், அரச பணிகள் கிடைக்கும் வரை காத்துக்கொண்டிராமல் தமக்கேயுரிய ஒரு தொழிலை ஆரம்பிப்பதற்கு உதவியாக அமையும். அதற்காக அரசினதும், தனியார் நிறுவனங்களினதும், தனியார் துறையினதும் தலையீடுகள் அவசியமாகும்.
இவையே அவர்களின் யோசனைகளாகும். இவை தொடர்பில சம்பந்தப்பட்ட தரப்புகளின் அவதானம் திரும்புமாயின் இந்த பிரச்சினைக்கு இலகுவில் தீர்வு காண முடியும்.

டிலானி, லக்மினி, விஜேகாந்த்

கட்புலனற்ற மாணவர்கள் பலர் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளமை உண்மையில் ஏனைய மாணவ சமுதாயத்திற்கு சிறந்ததொரு முன்னுதாரணமாக அமைகின்றது. இந்த வெற்றியின் பின்னணியில் பெற்றோர்கள், சகோதரர்கள். நண்பர்கள், ஆசிரியர்கள் போன்ற பலரின் அர்ப்பணிப்பும் இருக்கின்றது. அவர்கள் சிலரின் அனுபவங்களை அறிந்துகொள்வதனூடாக அவர்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள் பற்றிய புரிதலை மற்றவர்களுக்கு ஏற்படுத்த உதவும்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள டிலானி சந்தமாலி தனது அனுபவத்தை பின்வருமாறு கூறினார்:

‘2020ம் ஆண்டு நான் எனது பட்டப்படிப்பை நிறைவு செய்தேன். 2021லிருந்து களனி பல்கலைக்கழகத்தில் கணிணி ஆலோசகராக பணியாற்றினேன். ஆனால் போக்குவரத்து கஷ்டம், தங்குமிட பிரச்சினை போன்ற பிரச்சினைகளுடன் கிடைக்கும் ஊதியமும் போதுமானதாக இருக்கவில்லை. இதனால் பணியில் என்னால் தொடர முடியவில்லை. தற்போது நான் பாணந்துர பகுதியில் உள்ள விஷன் லங்கா நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றேன்.

இந்த நிறுவனத்தில் ஊதுபத்தி, விளக்குத்திரி மற்றும் மெழுகுதிரி போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றன. அவற்றை கட்புலனற்ற நபர்களே செய்கின்றனர். பெரியளவில் ஊதியம் இல்லாவிட்டாலும் எம்மைப் போன்ற நபர்களுக்கு ஏதாவது ஒரு சேவை கிட்டுவதால் எனக்கு பெரும் ஆத்மதிருப்தி கிடைக்கின்றது.’

கணிணி துறையிலும் மேலும் பல துறைகளிலும் ஆற்றல் உள்ள அவர், கட்புலனற்ற பட்டதாரிகள் எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை பற்றி மேலும் கூறினார்.

‘அரசு தொழில் வாய்ப்பு வழங்குவதனை நிறுத்திக் கொண்டாலும், விசேட தேவையுள்ளவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இவ்விடயம் தொடர்பில் அரச துறையும், தனியார் துறையும் மனிதநேயத்துடன் சிந்தித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முன்வர வேண்டும்’.

யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள விஜேகுமார் விஜேகாந்த் முழுமையாக கட்புலனை இழந்துள்ளார். 2009ல் முள்ளிவாய்க்கால் குண்டுவெடிப்பில் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. அவர் தற்போது ஈடுபடும் பணியில் போதுமானளவு ஊதியம் இன்மை காரணமாக அரச தரப்பிலிருந்து எமக்கு நீதி கிட்ட வேண்டும் என்று கூறினார். ‘எனக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர்.

தற்போது சமூக சேவை செய்யும் ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றுகின்றேன். எனது உழைப்பிலேயே என் குடும்பம் தங்கியிருக்கின்றது. எனக்கு 30 ஆயிரம் சம்பளம் கிடைக்கின்றது. தற்போதுள்ள செலவுகளுடன் ஒப்பிடுகையில் இது போதுமானதல்ல. மூத்தப் பிள்ளை தற்போது முன்பள்ளிக்கு போகிறார். அவரின் செலவு மட்டும் மாதம் 15 ஆயிரத்திற்கு மேல் வருகின்றது.’

லக்மினி வாசனா, ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிங்களப் பாடத்தில் அதி சிறந்த பெறுபேற்றைப் பெற்ற பட்டதாரி. சிங்களக் கற்கைகள் பிரிவில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றிய அவர் தற்போது நிரந்தரத் தொழில் இன்றி இருக்கின்றார்.

இலங்கையின் பிரபல கணிணி நிறுவனம் ஒன்றில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்துள்ள அவர், தற்போது சிங்கள மொழியைக் கற்பிக்கும் யூடியூப் செனல் ஒன்றை நடத்தி வருகின்றார். ‘தகுதியுள்ள எங்களை ஏன் புறக்கணிக்கின்றீர்கள் என்று நான் அரசாங்கத்திடம் கேட்க விரும்புகின்றேன்.

அதேபோல் முடிந்தவரை தமக்கென சொந்தமாக ஓர் தொழிலை ஆரம்பித்துக்கொள்ளுங்கள் என்று நான் மற்றவர்களுக்கு அறிவுரை கூற விரும்புகின்றேன். அப்பொழுது யாரிடமும் கையேந்தி வாழ வேண்டிய அவசியம் ஏற்படாது’.

சப்ராஸ், ஆசிரி, டிலக்ஷியா

கற்பிட்டியில் வசிக்கும் அகமட் சப்ராஸ் கொழும்பு பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள கட்புலனற்ற இளைஞராவார். ‘நான் இஸ்லாம் கலாசாரத்தில் விசேட பட்டம் பெற்றிருக்கின்றேன். அதி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கு கற்கைப் பிரிவில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினாலும், அந்த வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.

நான் இப்பொழுது இஸ்லாமிய வழிபாட்டு தலம் ஒன்றிலும், பாடசாலை ஒன்றிலும் சேவையாற்றகின்றேன். அந்த இரண்டு இடங்களிலும் தலா 15 ஆயிரம் என்ற அடிப்படையில் 30 ஆயிரம் வருமானம் மாதாந்தம் கிடைக்கின்றது. ஆனால் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் இந்த வருமானம் போதுமானதல்ல. அதேபோல அவசரப் பயணங்கள் செல்ல நேர்ந்தால் வாடகை வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது. இதுவும் மேலதிக செலவாக அமைகின்றது.’ சப்ராசின் மனைவியும் விசேட தேவையுள்ளவராவார்.

இதனால் போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளது. சிறுவயது முதலே கல்வி கற்று சிறந்த ஓர் இடத்தை அடைந்த பின்னர் எங்களை இவ்வாறு கைவிடுவது ஏன் என்று அரசிடம் கேட்க விரும்புகின்றேன். இவ்வாறு எங்களை புறக்கணிப்பது மிகவும் கவலை தரும் விடயமாகும்’.

மட்டக்களப்பைச் சேர்ந்த ஜே.டிலக்ஷியா கொழும்பு பல்கலைக்கழகப் பட்டதாரி. பல ஆண்டுகள் பலதரப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ள அவர், அந்த செயற்றிட்டங்கள் நிறைவடைந்து விட்ட காரணத்தினால் தற்போது வேலை இன்றி இருக்கின்றார். ‘ இப்பொழுது நான் வீட்டில் ஒரு சிறு தொழில் ஒன்றை செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் நிரந்தரமான வேலை ஒன்றுக்கான கட்டாய தேவை எனக்கு உள்ளது. கட்புலனற்று இருந்தாலும் எங்களுக்கும் கனவுகள் உண்டு. அந்த கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள எமக்கும் ஆசை உண்டு. அரசும் தனியார் துறையும் எங்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும்’.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள ஆசிரி ஜயசிங்க வெலிமட பிரதேசத்தில் வசிக்கின்றார். சமூகத்தின் பிற்போக்கான சிந்தனைகள் வாழ்க்கையுடன் விளையாடுவதாகக் குறிப்பிட்டார்.

‘2022ம் ஆண்டு பட்டம் பெற்றேன். எனது தந்தையாரை கடந்த ஆண்டு நான் இழந்தேன். குடும்பத்தின் மூத்த ஆண் பிள்ளை நான். தந்தை இறந்த பின் எமது குடும்பம் மிகவும் அனாதரவாகியது. இன்றும் நாங்கள் ஒரு வேளையோ இரண்டு வேளைகளோ சாப்பிடாமல் இருக்கின்றோம். நான் சில காலமாக வேலை ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கின்றேன்.

பார்வை இழப்பு காரணமாக வாய்ப்புகள் நழுவிச் சென்று விட்டன. கட்புலன் குறைபாடு என்பது நல்ல தொழில் ஒன்றைப் பெறுவதற்கு தடையே அல்ல. ஆனால் சமூகம் அது பற்றி அறியாதுள்ளது. அந்த சிந்தனைகளில் மாற்றம் ஏற்படாதது பெரும் பிரச்சினையாகும். தந்தையின் இழப்பும், சரியான வேலை இல்லாமல் இருப்பதும் எனக்கு பெருந்துயரத்தை தருகின்றது’

அரசே கடமையை நிறைவேற்று!

இலங்கை கட்புலனற்றோர் பட்டதாரிகள் சபையின் தற்போதைய பொருளாளர் சுகத் வசந்த இந்த தரப்பினரின் பிரச்சினைகள் தொடர்பில் மிக நீண்ட காலமாக செயற்பட்டு வருபவர். அவர் இவ்விடயம் குறித்து கருத்துக்களை எம்முடன் பகிர்ந்துகொண்டார்.

‘2012ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் சனத்தொகை கணக்கெடுப்பின்படி இலங்கையில் விசேட தேவையுடையவர்களின் எண்ணிக்கை ஒன்றரை மில்லியன்களுக்கும் அதிகமாகும். இதில் கட்புலனற்றவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் அதிகம்.

இதில் வேலையற்றிருப்பவர்களின் எண்ணிக்கை 77 சதவீதமாக உள்ளது. கல்வியை இடைநடுவில் கைவிட்ட கல்விக்கான வாய்ப்பைப் பெறாதவர்களும் இதில் அடங்குவர். சவால்கள், துன்பங்கள் மத்தியில் உயர்கல்வியைப் பெற்ற பட்டதாரி கட்புலனற்றவர்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

பல ஆண்டுகள் பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற கடினமாக உழைத்து இறுதியில் எந்த விதமான பலனும் இல்லாத நிலை அவர்களுக்கு உருவாகியுள்ளது. இதனால் கல்வியைத் தொடரும் கட்புலனற்ற இளம் பிள்ளைகளும் ஆர்வம் இன்றி இருக்கின்றனர்.

அரசாங்கம் வேலைவாய்ப்பு வழங்காதது பெரும் பிரச்சினையாகும். வருடா வருடம் சரியான முறையில் விசேட தேவையுடையவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டால் இந்த பிரச்சினை ஏற்படாது. ஐ.நா சாசனத்தின்படி இது அரசாங்கத்தால் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். ஆனால் எதுவும் நடைபெறாதது தான் பிரச்சினை’.

சத்யா நிர்மாணி (wsnirmani@gmail.com)

(கட்டுரையாளரும் கட்புலனற்றவர். அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் விசேட பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.)

 

Recommended For You

About the Author: S.R.KARAN