அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஏறக்குறைய 85 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், அவை இன்று டெல்லி தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக செயல்பட்டு வரும நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரு தரப்பில் இருந்தும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையொட்டி சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வதற்காக, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் விண்ணப்ப படிவம் வினியோகம் செய்யப்பட்டு, அதனை முறைப்படி பூர்த்தி செய்து அனுப்ப அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில், 85 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் அதிமுக அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், அவை இன்று காலை டெல்லி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன