ரஷ்யாவையும் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியாவையும் இணைக்கும் பாலத்தின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு
“மிகவும் கடுமையான” பதிலடி வழங்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்திருந்த நிலையில்,
உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள மூன்று முக்கியப் பாலங்களைக் குறிவைத்து ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை (20) முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களில், கீவ்வின் பொடில்ஸ்கோ-வோஸ்க்ரெசென்ஸ்கி (Podilsko-Voskresenskyi) பாலம் மற்றும் டார்னிட்ஸ்கி (Darnytskyi) பாலம் ஆகியவை சேதமடைந்துள்ளதாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
முன்னதாகத் தாக்குதலுக்கு உள்ளான தெற்குப் பாலமும் மீண்டும் தாக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல்களால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்துப் பாதிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்ததுடன், நகரின் சில பகுதிகளில் அவசர மின்தடை ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி நிறுவனமான DTEK தெரிவித்துள்ளது.
உக்ரைன் முழுவதும் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட ரஷ்யத் தாக்குதல்களில், கீவ்வில் ஆறு பேர் உட்பட மொத்தம் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதாகவும், 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் பிரதமர் செர்கி கொரெட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் கிரிமியா இடையிலான கெர்ச் (Kerch) பாலத்தை உக்ரைன் இந்த வாரம் தாக்கிச் சேதப்படுத்தியதைத் தொடர்ந்தே, ரஷ்யா இந்தப் பதிலடித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், இராணுவ-தொழில்துறை வளாகங்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்புகளையே இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாகவும், பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைக்கவில்லை என்றும் ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

