திறமைக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம்! டுபாயில் சிறந்த இளம் சமையல் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இலங்கையர்
உலகின் முன்னணி சமையல் கலைஞர்களின் கனவான ‘ Michelin 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற டுபாயின் புகழ்பெற்ற உணவகத்தில் பணியாற்றி, Caterer Middle East விருது விழாவில் வளர்ந்து வரும் சிறந்த இளம் சமையல் கலைஞர் விருதை வென்ற இலங்கையர் என்ற வரலாற்றுச் சாதனையை பேர்ள் சங்கீத் படைத்துள்ளார்.
சர்வதேச சமையல் கலை அரங்கில் இலங்கையின் பெயரை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ள இவரது இந்த மகத்தான பயணம், இன்றைய இளைய தலைமுறையினருக்குப் பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது.
இலங்கையில் உள்ள Swiss Lanka Culinary School தனது ஆரம்பக் கல்வியை முடித்த சங்கீத், கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தனது தொழில்முறை வாழ்க்கையின் முதல் அடியை எடுத்து வைத்தார்.
அங்கு பெற்ற நடைமுறை அனுபவங்களே, அவரது அடுத்தகட்ட சர்வதேசப் பயணத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்தன.
துபாயின் Atlantis The Palm ஹோட்டலில் உள்ள ஒரு மிச்செலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற Ossiano உணவகத்தில் இணைந்தது இவரது வாழ்வின் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது.
அங்கு வெளிப்படுத்திய அபாரத் திறமையால், உலகளவில் மூன்று மிச்செலின் நட்சத்திர உணவகங்களுக்குத் தலைமை தாங்கும் புகழ்பெற்ற சமையல் கலைஞர் FZN by Björn Frantzén குழுவில் இணையும் அரிய வாய்ப்பை இவர் பெற்றார்.
உயர்தர மிச்செலின் நட்சத்திர சமையலறையில் பணியாற்றுவது என்பது சாதாரண சமையல் முறையையும் தாண்டி, மிகுந்த ஒழுக்கம், துல்லியம், தரம் மற்றும் கூட்டு முயற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய கடினமான வாழ்க்கை முறையாகும்.
நீண்ட நேரப் பணி, கடுமையான தொழில்முறை அழுத்தங்கள் மற்றும் அன்றாடச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு அவர் வெளிப்படுத்திய திறமைக்குக் கிடைத்த உயரிய அங்கீகாரமாக இந்த 2026 விருது கருதப்படுகிறது.
தளராத துணிச்சலுடனும் அர்ப்பணிப்புடனும் கடினமான பாதையில் பயணித்து வெற்றி பெற்றுள்ள செஃப் பேர்ள் சங்கீத்தின் இந்தச் சாதனை முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது.
தெளிவான இலக்குடன் தமது கனவுகளுக்காக உழைக்கும் எந்தவொரு இளைஞருக்கும் உலகை வெல்ல எந்தத் தடையும் இல்லை என்பதை இவரது வாழ்க்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

