அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் இரு இந்திய வம்சாவளி ஜனநாயகக் கட்சியினர் வெற்றி

அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் இரு இந்திய வம்சாவளி ஜனநாயகக் கட்சியினர் வெற்றி: புதிய வரலாறு படைத்தார் பியா தண்டியா!

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான (US House of Representatives) தேர்தலில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் இருவர் தேர்தல் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

 

புளோரிடா மாநிலத்தின் 22-வது நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட பியா தண்டியா (Pia Dandiya) வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், புளோரிடாவிலிருந்து அமெரிக்க காங்கிரஸுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார்.

 

இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த பெற்றோருக்கு பாம் பீச் கவுண்டியில் பிறந்து வளர்ந்த பியா தண்டியா, ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கி, பின்னர் உயர்நிலைப் பள்ளி அதிபராகவும் (Principal), வெள்ளை மாளிகை உறுப்பினராகவும் (White House Fellow), பிரபல ஆப்பிள் (Apple) நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார்.

 

இதேவேளை, வர்ஜீனியா மாநிலத்தின் 10-வது நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சுஹாஸ் சுப்ரமணியம் (Suhas Subramanyam) இரண்டாவது முறையாக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஹாஸ் சுப்ரமணியம், வெள்ளை மாளிகையின் தொழில்நுட்பக் கொள்கை ஆலோசகராகவும், மாநில சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றியவர். இவர் லூடவுன் கவுண்டி (Loudoun County) உள்ளிட்ட வடக்கு வர்ஜீனியா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

 

அமெரிக்காவின் முக்கிய அரசியல் தளங்களில் இந்திய வம்சாவளியினரின் பிரதிநிதித்துவமும் ஆதிக்கமும் தொடர்ந்து வலுவடைந்து வருவதை இவ்விருவரின் வெற்றியும் எடுத்துக்காட்டுகின்றது.

 

வர்ஜீனியா மாநில வரலாற்றில் அமெரிக்க காங்கிரஸுக்குத் தெரிவான முதல் இந்திய வம்சாவளிப் பிரதிநிதி என்ற பெருமையை சுஹாஸ் சுப்ரமணியம் 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin