அமெரிக்க நாடாளுமன்றத்தைக் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி:
ட்ரம்பிற்கு இனி காத்திருக்கும் மாபெரும் அரசியல் சவால்கள்!
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் (Midterms) நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை (Chambre des représentants) மற்றும் செனட் சபை (Sénat) ஆகிய இரண்டையும் ஜனநாயகக் கட்சி (Democrats) முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) எஞ்சிய பதவிக்காலம் கடுமையான அரசியல் போராட்டங்கள் நிறைந்ததாக மாறவுள்ளது.
நிர்வாக அதிகாரங்கள் ட்ரம்பின் கைகளில் இருந்தாலும், சட்டவாக்க மற்றும் நிதி அதிகாரங்களை இழந்துள்ளதால் அவர் இனி எடுக்கப்போகும் ஒவ்வொரு நகர்வுக்கும் ஜனநாயகக் கட்சியின் மாபெரும் முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ள நேரிடும்.
ஜனநாயகக் கட்சி முன்னெடுக்கக் காத்திருக்கும் அதிரடித் திட்டங்கள் என்னென்ன?
வேகமான சட்டவாக்கப் போர்:
ஜனவரி மாதம் புதிய நாடாளுமன்றம் கூடிய முதல் 100 மணிநேரத்திற்குள் பல அதிரடிச் சட்டங்களைக் கொண்டுவரப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஹாக்கீம் ஜெஃப்ரிஸ் (Hakeem Jeffries) திட்டமிட்டுள்ளார்.
மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ‘மெடிகெய்ட்’ (Medicaid) நிதியில் செய்யப்பட்ட வெட்டுக்களை ரத்து செய்தல், சுங்கவரிகளை நீக்குதல் மற்றும் மத்திய கிழக்கில் முன்னெடுக்கப்படும்
போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்பிற்கு அழுத்தம் கொடுத்தல் ஆகியவை இவர்களின் முதன்மைப் பட்டியலில் உள்ளன. அதனைத் தொடர்ந்து,
குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துதல் மற்றும் சமூகக் குடியிருப்புகளுக்கான வரிச்சலுகைகளை வழங்குதல் போன்ற சட்டங்களையும் அவர்கள் கொண்டுவரவுள்ளனர்.
‘வீட்டோ’ அதிகாரமும் நிதிப் பிடியும்:
ஜனநாயகக் கட்சி எத்தகைய சட்டங்களைக் கொண்டுவந்தாலும், அதனைத் தனது ‘வீட்டோ’ (Veto) அதிகாரத்தின் மூலம் நிராகரித்து அவர்களைத் தன்னிடம் பேரம்பேச வைப்பேன் என ட்ரம்ப் ஏற்கனவே எச்சரித்துள்ளார்.
ஆனால், நாடாளுமன்றத்திற்குத்தான் நிதி ஒதுக்கீட்டைத் தீர்மானிக்கும் ‘பணப்பையின் அதிகாரம்’ (Pouvoir de la bourse) உள்ளது. எனவே, வரவு-செலவுத் திட்டங்கள் மற்றும் குடிவரவுக் கொள்கைகளில் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு ஜனநாயகக் கட்சி கடும் நெருக்கடி கொடுக்கும்.
விரிவான நாடாளுமன்ற விசாரணைகள்:
பிரதிநிதிகள் சபையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின்
நிதி ஒப்பந்தங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி (Cryptomonnaies) பரிவர்த்தனைகள் குறித்து ஆழமான ஊழல் விசாரணைகளைத் தொடங்க ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.
குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களுக்காகப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) மற்றும் அரசாங்கத் திறன் மேம்பாட்டுத் துறையின் முன்னாள் தலைவரான எலோன் மஸ்க் (Elon Musk) ஆகியோரின் செயல்பாடுகள் தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படவுள்ளன.
நியமனங்களுக்குத் தடை மற்றும் பதவிநீக்க அச்சுறுத்தல்:
செனட் சபையில் 51 இடங்களுக்கும் மேலான பெரும்பான்மையைக் கொண்டுள்ளதால்,
இனி ட்ரம்ப் முன்மொழியும் அமைச்சர்கள், தூதர்கள் மற்றும் கூட்டாட்சி நீதிபதிகளின் நியமனங்களை ஜனநாயகக் கட்சியினரால் எளிதாகத் தடுத்து நிறுத்த முடியும். அதேவேளை, ட்ரம்பிற்கு எதிராக மீண்டும் ஒரு பதவிநீக்கத் தீர்மானத்தைக் (Procédure de destitution) கொண்டுவருவது குறித்துப் பரிசீலிக்கப்பட்டாலும்,
அதற்குச் செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுவதாலும், அது ட்ரம்பிற்கே அரசியல் ரீதியாகச் சாதகமாக மாறக்கூடும் என்பதாலும் அந்த விவகாரத்தில் ஜனநாயகக் கட்சி சற்றுத் தயக்கத்துடனேயே காணப்படுகிறது.

