நாடு தழுவிய சுற்றிவளைப்பு: 327 தலைக்கவசங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, கட்டாய SLS தரச்சான்றிதழ் இன்றி விற்பனை செய்யப்பட்ட சுமார் 327 தலைக்கவசங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
21 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்பட்ட 84 சுற்றிவளைப்புகளின் போதே இந்தத் தலைக்கவசங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
SLS 517 தரநியமங்களுக்கு அமைவாக SLS சான்றிதழ் முத்திரை கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனைப் பின்பற்றாது விற்பனை செய்யப்படும் பாதுகாப்பு தலைக்கவசங்களை இலக்குவைத்து கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி முதல் இந்த விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பல்வேறு வர்த்தக நாமங்களின் கீழ் விற்பனை செய்யப்பட்ட தலைக்கவசங்கள் கண்டறியப்பட்டதுடன், ஒரே மாதிரியான வர்த்தக நாமங்கள் பல மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சில்லறை விற்பனை நிலையங்களுக்கு அப்பால், குறித்த தரமற்ற பொருட்களை சந்தைக்கு விநியோகித்த இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்களைக் கண்டறியும் நோக்கில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கம்பஹா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் போலியான SLS ஸ்டிக்கர்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அது குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சிறுவர்களுக்கான தலைக்கவசங்கள் மற்றும் சிறிய அளவிலான தலைக்கவசங்கள் என்பனவும் SLS தரச்சான்றிதழ் இன்றியே சந்தைப்படுத்தப்பட்டு வந்துள்ளமை இதன்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

