சவூதி ரியாத் கிங் காலித் விமான நிலையம் மீதான தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி!!
சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி
மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறிவரும் நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சவூதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் தகவல்படி, உயிரிழந்தவர்களில் 4 சவூதி பிரஜைகளும், 2 பங்களாதேஷ் பிரஜைகளும், அமெரிக்கா, ஜோர்டான், பாலஸ்தீனம், சிரியா, சூடான் மற்றும் எகிப்து
ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலையடுத்து மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
ரியாத்துக்கான அனைத்து விமானங்களும் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளதுடன் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமானச் சேவை கண்காணிப்புத் தளங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
குவைத் ஏர்வேஸ் உட்பட பல வளைகுடா விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன.
இதேவேளை. இந்தத் தாக்குதலை ஹூதி கிளர்ச்சியாளர்களே நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ள சவூதி தலைமையிலான இராணுவக் கூட்டிணைவுப் படையின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் துர்கி அல்-மாலிகி,
இது ஒரு முழுமையான போர்க் குற்றம் என்றும், இதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ இத்தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன்,
தனது நாட்டின் பிரஜை ஒருவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, சவூதியில் உள்ள மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள் மற்றும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் ஆகியவை,
நிலைமை சீராகும் வரை விமான நிலையப் பகுதியைத் தவிர்க்குமாறு தங்களது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
யேமனில் சவூதி ஆதரவு பெற்ற அரச படைகளுக்கும், அந்த நாட்டின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போர் அண்மைய நாட்களாக தீவிரமடைந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஒரு நாள் முன்னதாக சவூதியின் இரு விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் விமானி ஒருவர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர்.
அதற்கு முன்னதாக கடந்த 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் மூவர் பலியாகியிருந்தனர். சனிக்கிழமையன்று தம்மாமில் உள்ள மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலும் எறிகணை ஒன்று விழுந்துள்ளமையும் குறிப்பிடத்தகுந்தது.
சவூதி அரேபியா தனது கடல் எல்லைகளில் விதித்துள்ள முற்றுகைக்கும், ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையத்தின்
மீதான வான்வழித் தாக்குதலுக்கும் பதிலடியாகவே சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருவதாக ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.

