பிரான்ஸில் தீயணைப்புப் படையினர் இன்று செப்டம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்தப் போராட்டம் அக்டோபர் 20ஆம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் கூடுதல் பணியாளர்கள்,
நிதி மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் எனக் கோருகின்றன. குறிப்பாக, சுமார் 21,000 புதிய தொழில்முறை தீயணைப்புப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கோடைக்காலத்தில் பிரான்ஸின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீகளால் தீயணைப்புப் படையினரின் பணிச்சுமை அதிகரித்துள்ள நிலையில், போதிய மனிதவளம் மற்றும் வளங்கள் இல்லாதது குறித்து அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தீயணைப்புப் படையினர் மேற்கொள்ளும் அவசர மருத்துவ உதவிப் பணிகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களின் முக்கியமான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கு கூடுதல் வளங்கள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தீயணைப்புப் பணியின்போது புகை மற்றும் பல்வேறு நச்சுப் பொருட்களுக்கு ஏற்படும் தொடர்ச்சியான வெளிப்பாடு பணியாளர்களின் உடல்நலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும்,
இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
அரசு முன்வைத்துள்ள புதிய சிவில் பாதுகாப்புச் சட்ட முன்மொழிவுகள் தங்களின் முக்கியக் கோரிக்கைகளுக்கு போதுமான தீர்வை வழங்கவில்லை என அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தின் ஒரு பகுதியாக செப்டம்பர் 27, 28ஆம் தேதிகளில் பல்வேறு நடவடிக்கைகளும், செப்டம்பர் 29ஆம் தேதி பாரிஸில் ஆர்ப்பாட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

