“பஸ் லலித்” மீது கொலை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் – பொலிஸார் தகவல்
துபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 36 வயதுடைய லலித் கண்ணங்கரா எனப்படும் “பஸ் லலித்” மீது பல கொலைகள், கொலை முயற்சிகள், துப்பாக்கிச் சூடுகள், கப்பம் பெறுதல், தீ வைப்பு, தாக்குதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2013ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
குறிப்பாக ஹன்வெல்ல, பதுக்கை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் இடம்பெற்ற பல கொலை மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் அவரது தொடர்பு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2024ஆம் ஆண்டு அவருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், துபாயில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள அவரிடம், குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்டிருக்கக்கூடிய சொத்துக்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

